cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 21 மலர்விழி மொழிபெயர்ப்பு தொடர்கள்

இஜியோமா உமேபின்யுவோ கவிதைகள்


சில கேள்விகள்

  • கழுவுதல்

குவாமேவிற்கு
அழகான கருப்புத் தோலும்
பளபளப்பான பற்களும் இருந்தன

ஐந்தாம் வகுப்பு படித்தபோது
பள்ளியிலிருந்து திரும்பியவன்
அக்ரா நகரின் மூடுபனி போன்ற கெட்டியான உச்சரிப்பில்
பள்ளிக்குச் செல்ல மாட்டேன்
எனக் கெஞ்சினான்

கானாவின் மொழி தோய்ந்த நாக்குடன்
சிரிப்பதை விரும்பினான்
நடனமாடுவதை நேசித்தான் தண்ணீர் என்ற சொல்லை உச்சரித்ததைக்
கேலி செய்து சிரித்த சிறுவர்களால்
மெல்ல குவாமே
உரக்கப் பேசுவதை நிறுத்தினான்

விலங்கு போன்ற‌ ஒலிகளை உண்டாக்கிய
அவன் பள்ளித் தோழர்களால்
குவாமே நடனமாடுவதை நிறுத்தினான்

ஆனால்
குவாமேவிற்கு
அழகான கருப்புத் தோலும்
பளபளப்பான பற்களும் இருந்தன
தான் சமைத்த உணவை
ஏன் பழிக்கிறான் எனக் கேட்டு
அவன் தாய் கெஞ்சினாள்

அவன் பெயரை
ஸ்டீவென்று மாற்றிய‌ போதும் குவாமே
அந்தப் பள்ளிக்குள்
பொருந்திப் போகவில்லை

சருமம் வலிக்கும் வரை தேய்த்துக் கழுவினான்
அப்போதும் அவன் மூதாதையர்களைப் போலவே கருப்பின் மினுமினுப்போடு இருந்தான்

ஒரு நாள்
அவன் தாய் பார்த்தாள்
படுக்கையின் ஓரம்
தன் நடுநிசி நிறம் மறைவதற்காக
கடவுளிடம் மண்டியிட்டுக்
கெஞ்சிய குவாமேவை..

  • பிழைத்திருத்தல்

தங்கள் சருமத்தின் மீது
கூர்நகங்களை வளர்ப்பதனால்
சில பெண்கள்
பிழைத்திருக்கின்றனர்
வருவோரைக் கிள்ளிப் பரிசோதித்து
கூர்நகங்களை வெட்டி
அன்பின் திரவமாக மாறும் முன்பு

அவர்களைச் சபிக்காதீர்கள்
அவளைத் தாக்கியவன் வந்தபோது
அவள் திரவமாகத்தான் இருந்தாள்
அப்போது தான் அவளுக்கான பாடத்தைக் கற்றுக் கொண்டாள்

சில பெண்கள் சுவர்களை எழுப்புவதன் மூலம் பிழைத்திருக்கின்றனர்
பெருஞ்சுவர்கள்
அவர்களின் இதயங்களைக்‌ காக்கின்றன
அவர்களை அனுமதிக்கச் சொல்கிறீர்கள்
ஆனால் அவள் வருத்தத்தில் மூழ்கியிருந்த போது
விமோச்சனத்திற்காக
மண்டியிட்டுக் கடந்தவள்

அவளைச் சபிக்காதீர்கள்
அவளைத் தாக்கியவன் வந்தபோது அவள் காதலித்துக் கொண்டுதான் இருந்தாள்
இப்போது
ஒட்டுண்ணிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள
அவளுக்கான சுவரை
ஒவ்வொரு செங்கல்லாக வைத்து அவளே எழுப்பினாள்

அவளைப் பழி சொல்லாதீர்கள்
உடைந்து போன பெண்கள் சிலர்
ஆற்றுப்படத் தயாராக இல்லை
உடைந்து போன பெண்கள் சிலர்
காதலிக்கத் தயாராக இல்லை
அதுவே சரி‌

அவளே அவளைக் கண்டறியட்டும்
தேவைப்பட்டால் ஊர்ந்து போகட்டும்
அவளே அவளைப் பகுத்துப் பார்க்கட்டும்
அவளுக்குத் தெரிந்தவற்றைக் கேள்வி கேட்கட்டும்
அவளே அவளுடைய சூரியனாகட்டும்
அவள் அவளாகவே இருக்கட்டும்

  • உன் நாவில் ஐந்து மொழிகளைச் சுமந்து கொண்டிருக்கிறாய் நீ

முதலாவது மொழியை நீ எட்டு வயதில் கற்றுக் கொண்டாய்
உன் உடன்பிறந்தோரிடமிருந்து தனியே அழைத்துச் சென்று
சில ஆண்கள் சிறுமிகளைக் கண்டு புன்னகைப்பது ஏன் உன்னைச் சங்கடப்படுத்தியது
என்று கற்றுக் கொடுத்தான்
நீ வேதனையுடன் கற்றுக் கொண்டாய்
அவநம்பிக்கையின் ரகசிய மொழியை

இரண்டாவது மொழியைப் பத்து வயதில் கற்றுக் கொண்டாய்
“வெள்ளைத் தோல் தங்கையைக் காட்டிலும் நீ எப்போதும் அழகில்லை” என்று உன் மாமா சொன்ன போது
ஐந்து வருடங்கள் கழித்து
உன் சருமத்தைக் கொஞ்சம்
வெளிர் நிறமாக மாற்றக் கேட்டு நீ கெஞ்சியதால்
உன் அம்மா அழுவதைப் பார்த்தாய்
ஏனெனில் நீ சுய வெறுப்பின் மொழியைக் கற்றுக்கொண்டாய்

அத்தை தன்னை அடித்ததற்காகத் தண்டிக்கப்பட்ட கணவனிடம் திரும்பிச் சென்றபோது
நீ மூன்றாவது மொழியைக் கற்றுக் கொண்டாய்

அவள் கண்களில் கண்ணீர் நிறையச் சொன்னாள் “ஆண் இல்லாது பெண் என்பவள் ஒன்றுமில்லை”
நீ ஆதரவற்றோரின் மொழியைக் கற்றுக் கொண்டாய்

அவன் இருபது வயதில் உன்னை
முத்தமிட்ட போது
நீ நான்காவது மொழியைக் கற்றுக்கொண்டாய்
நீ படபடத்தாய்
உன் நாக்கு அவநம்பிக்கையென்னும் மொழியில் எவ்வளவு சரளமாக இருக்கிறது என்பதை
நீ அவனிடம் சொல்லவில்லை

“நீ கன்னி தானா?” என்று கேட்ட
அவனுடைய கண்களில் மகிழ்ச்சியை கவனித்தாய்
அந்தக் கணத்தில் நீ இன்னொரு மொழியைக் கற்றுக் கொண்டாய் அதிகாரத்திற்கான மொழி

ஐந்தாவது மொழியை இருபத்தைந்தாவது வயதில்
நீ கற்றுக் கொண்டாய்
நண்பர்கள் உன் இருளிற்கான பங்களிப்புகளை அளித்த போது
வலியுடன் உன் தோலை உரித்து
இன்னொரு உயிரை வெளிப்படுத்தி
மாற்றத்திற்கான மொழியைக் கற்றுக் கொண்டாய்.


இஜியோமா உமேபின்யுவோ (Ijeoma Umebinyuo)

ஒரு நைஜீரிய கவிஞர். அவர் துணை- சஹாரா ஆப்பிரிக்காவின் சிறந்த நவீன கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் ஏழு வயதில் எழுதத் தொடங்கினார். மேலும் அவரது சிறுகதைகள் மற்றும் கவிதைகள் தி ஸ்டாக்ஹோம் ரிவ்யூ ஆஃப் லிட்டரேச்சர், தி ரைசிங் ஃபீனிக்ஸ் ரிவ்யூ மற்றும் தி மேக்கஃபின் போன்ற வெளியீடுகளில் வெளிவந்துள்ளன. அவரது TEDx பேச்சு “அமைதியின் கலாச்சாரத்தை கலைத்தல்” என்று அழைக்கப்பட்டது. அடாவிற்கான கேள்விகள் என்ற கவிதைப் புத்தகம் வெளிவந்துள்ளது, மேலும் அவரது படைப்புகள் துருக்கியம், போர்த்துகீசியம், ரஷ்யன் மற்றும் பிரஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

 

About the author

மலர்விழி

மலர்விழி

கவிஞர் மலர்விழி பெங்களூரில் வசிக்கும் மென்பொறியாளர், கவிதைகள் எழுதுவதோடு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். ஓவியங்கள் மீதும்  வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடைய,
இவருடைய கவிதைத் தொகுப்புகள் :
’விடாமல் துரத்தும் காதல்’ (எமரால்டு பதிப்பகம்),
“ஜூடாஸ் மரம்” (வேரல் புக்ஸ் ),
மற்றும் மலர்விழியின் மொழிபெயர்ப்பில் ‘அகாசியா மலர்கள்’
- பன்னாட்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள். (வலசை பதிப்பகம்0

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website