- இரவுக்கொரு காதல்
நட்சத்திரக் கூடாரத்தின் கீழ்
ஒரு தனிமனிதன்
நள்ளிரவின் நிசப்தத்தில் நடக்கிறான்
ஒரு சிறுவன் கனவுகளால் தடுமாறி எழுகிறான்
அவனது சாம்பல் முகம் நிலவில் மங்குகிறது
ஜன்னல் கம்பிகளின் பின்னே
தளர்ந்த கூந்தலுடன்
ஒரு முட்டாள் பெண் அழுகிறாள்
குளத்தில் மிதக்கும் காதலர்கள் இருவர்
அவர்களின் இனிய பயணத்தை தொடர்கிறார்கள்
அந்தக் கொலைகாரன்
திராட்சை ரசத்தில்
வெளிறிப்போகும் வரை சிரிக்கிறான்
மரணத்தின் திகில் பாதிக்கப்பட்டவர்களை விழுங்குகிறது
இரட்சிப்பவனின் வலிக்கு முன்னே காயங்களுடன் நிர்வாணமாய் கன்னியாஸ்திரி பிராத்திக்கிறார்
ஒரு தாய் தூக்கத்தில் மெல்லிய குரலில் பாடுகிறாள்
மனநிறைவுடன் அவளுடைய குழந்தை இரவினை உற்றுப் பார்க்கிறது
ஒரு புன்னகை விபச்சார விடுதியிலிருந்து மெல்ல மறைகிறது
கீழே மதுவிடுதியின் அருகே,
அந்த விளக்கு வெளிச்சத்தில்
இறந்தவர்கள் தங்களின் வெண்கரங்களால்
அந்தச் சுவரில் பரிகசிக்கும் அமைதியை வரைகிறார்கள்
உறங்கிக் கொண்டிருப்பவர்களோ தொடர்ந்து முணுமுணுக்கிறார்கள்
- மனம் தளர்ந்த மனநிலை
இருண்ட வாய் போல் நீ எனக்குள்ளிருக்கிறாய்
நீ வலிமையான
இலையுதிர் கால மேகங்களாலும், பொன்மாலைப் பொழுதின் அமைதியாலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறாய்
உடைந்த பைன் மரங்கள் வீசியெறிந்த நிழலில்
ஒரு மலையருவி
பச்சை ஒளியில்
இருளாய் மாறுகிறது
ஒரு சிறிய நகரம்
பழுப்பு நிறப் படங்களில்
இறைநம்பிக்கையோடு
இறந்து விடுகிறது
இப்போது பனி மூடிய
மேய்ச்சல் நிலத்தின் பின்னால்
கருப்புக் குதிரைகள் இருக்கின்றன , நான் போர் வீரர்களை நினைத்துக் கொள்கிறேன்
மலையடிவாரத்தில் மறையும் சூரியன், மரம் வெட்ட,
ரத்தம் சிரித்தபடி வழிகிறது
பேச்சிழந்த
கருவேல மரத்தடியில்!
ஓ! ராணுவத்தின்
நம்பிக்கையற்ற மனச்சோர்வே !!
பளபளக்கும் இரும்புத் தலைக்கவசம் ஒன்று
இரத்தம் தோய்ந்த நெற்றியிலிருந்து
சத்தத்துடன் கீழே விழுகிறது
இலையுதிர்கால இரவு
மிகுந்த குளிருடன் வருகிறது
அவருடைய வெள்ளை உடை
சிதிலமுற்ற சடலங்களின் மீது
நட்சத்திரங்களைப் போல மின்னுகிறது
கான்வென்ட் கன்னியாஸ்திரி அமைதியாக இருக்கிறார் !!
- திகில்
நான் கைவிடப்பட்ட அறைகளுக்குள் உலவும் என்னைக் கண்டேன்
பித்துப் பிடித்தாற் போல நட்சத்திரங்கள் நீலப்பரப்பில் நடனமாடின
வயல்களில் நாய்கள் சத்தமாக ஊளையிட்டன
மரங்களின் உச்சிக் கிளைகளை உஷ்ணக்காற்று மூர்க்கத்தனமாக கலைத்துப் போட்டது
ஆனால் திடீரென்று: அமைதி!
காற்றிழந்த காய்ச்சலின் பொலிவு
விஷப் பூக்கள் என் வாயிலிருந்தே பூக்கட்டும்
காயம் போலிருக்கும் கிளைகளிலிருந்து
பளபளக்கும் வெண்பனி விழுகிறது, விழுகிறது,
இரத்தம் போல் விழுகிறது.
ஒரு கண்ணாடியின் வஞ்சக வெறுமையிலிருந்து
தெளிவின்மையில்
ஒரு முகம் மெல்ல மெல்ல எழுகிறது
திகில் மற்றும் இருளிலிருந்து: கெய்ன்!
மிக மெதுவாய் வெல்வெட் திரைச்சீலைகள் சலசலக்கின்றன
ஜன்னல் வழியே நிலவு வெறுமைக்குள் இருப்பதாய் தெரிகிறது
அங்கே நான் என்னை கொன்றவனுடன் தனியாக இருக்கிறேன்
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜெர்மன் இலக்கியத்தில் ஒரு முக்கியமான பாடல் கவிஞர் ஆவார். விமர்சகர்கள் அவரது படைப்பை பல்வேறு நவீன கலை இயக்கங்களுடன் தொடர்புப்படுத்துகிறார்கள், மேலும் அவர் இருண்ட, உள்நோக்க தொனியை அமைப்பதில் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார், இது பின்னர் ஜெர்மன் வெளிப்பாடுவாதத்தின் போக்கை பாதித்தது. ட்ராக்கலின் வியக்கத்தக்கக் காட்சி பாணியில் கற்பனையுடனான தொடர்புகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. கூடுதலாக, அவரது கவிதைகளில் உருவங்களின் கனவு போன்ற ஓட்டம், சில வர்ணனையாளர்களுக்கு சர்ரியலிஸ்டுகளின் தானியங்கி எழுத்தைப் போன்ற ஒரு கலவை முறையைக் குறிக்கிறது, அவருடன் டிராக்ல் வன்முறை, வக்கிரம் மற்றும் மரணம் ஆகியவற்றில் ஆர்வத்தைப் பகிர்ந்து கொண்டார்.
சிறுவயதிலிருந்தே ட்ராக்ல் கவிதை எழுதிக் கொண்டிருந்தாலும், அவரது சிறந்த படைப்பு அவரது வாழ்க்கையின் இறுதி இரண்டு ஆண்டுகளில் இருந்து வருகிறது என்று விமர்சகர்கள் ஒப்புக்கொள்கிறார்கள், 1912க்கு முந்தைய அவரது முயற்சிகளின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது.
ஹெர்பர்ட் லிண்டன்பெர்கர் ஜார்ஜ் ட்ராக்கில் பற்றி இவ்வாறு எழுதினார், “டிராக்கலின் கவிதைகளின் உயரமான நிலைப்பாடு, பிரபஞ்ச வீச்சு மற்றும் அமானுஷ்ய இசை ஆகியவை அவரை ரில்கேவுடன் குறிக்கின்றன, ஒருவேளை ஜெர்மன் மொழியில் விழுமிய பாரம்பரியம் என்று அழைக்கப்படக்கூடிய கடைசி பெரிய பிரதிநிதியாக டிராக்கில் இருக்கலாம்.”
Spotify App மூலமாக இந்தக் கவிதைகளை கேட்கலாம்.
முதன் முதலாக கவிஞர் மலர்விழி அவர்களின் மொழிபெயர்ப்பில் கவிதைகளை வாசிக்கிறேன் ….உண்மையில் மிக நேர்த்தியான படைப்பாக்கம் …இத்தனை நாள் தவறவிட்டதற்கு வருந்துகிறேன் ….அவருக்கு என் வாழ்த்துகள் 🌷🌷🌷