உனது இதயத்தில் தீர்க்கப்படாமல் மிச்சமிருக்கின்ற
அனைத்தின் மீதும் பொறுமை கொள்.
கேள்வியில் உயிர்த்திரு.
-ரெயினர் மரியா ரில்கே
(ஜெர்மன் கவி)
1894-1925
பொதுவாகவே அடிப்படை புரிதல்களில் வாசகருக்கு எழுகின்ற கேள்விகள் முக்கியமானவை. அதற்கு கொஞ்சம் பின்னோக்கி போய்விட்டு வருவதும் நல்லதே. சமூகம் குறித்தோ, அதில் நடக்கின்ற அவலங்கள் குறித்தோ நமக்கு அக்கறை இருக்கிறது என்பது ஒரு நிலை. அவற்றின்மீது தனிமனிதனுக்கு எழக்கூடிய கருத்தாக்கம் என்பது நபருக்கு நபர் வேறுபடும்.
அதே வேளை, தனிமனிதன் சமூக மனிதனாக அடையாளப்படுகின்ற தருணத்தில்.. அங்கே ஒற்றை மனமோ ஒற்றைக் கருத்தோ இல்லை. அங்கே வெளிப்படுவது ஒரு கூட்டு மனம் அல்லது ஒற்றைத் தோற்றமுள்ள கூட்டு மனப்பான்மை. அதன் போக்கில் நடைமுறையாகின்ற விஷய கனமும் அர்த்தங்களின் கோணமும் ஒற்றைத்தன்மையிலான வாய்ப்பை ஒருபோதும் வழங்குவதில்லை.
ஆகையால், நவீனத்திற்கும் நவீனத்துவத்திற்கும் நடுவே உள்ள வித்தியாசத்தை கொஞ்சம் விஸ்தாரமாக ஏரியல் வியூவில் பார்த்துவிடலாம்.
நவீனம் (Modernity) என்பது ஒரு காலகட்டம்.
Modern என்கிற ஆங்கிலச் சொல்லை பலகாலமாக தமிழில் நவீனம் என்று குறிப்பிட ஆரம்பித்துவிட்டோம். அனேகமாக அது எழுத்தாளர் க.நா.சு –வின் காலமாக இருக்கலாம். அதற்கும் முன்னதாக தம் காலத்தில் மகாகவி பாரதி Modernity –யைத்தான் ‘புதுமை’ என்றார். புனைப்பெயராகவே சூடிக்கொண்டு எழுத்தாளர் ‘புதுமைப்பித்தன்’ இருந்தார். சரி, அப்படி என்னத்தான் அந்த மாடர்னிட்டி? ஏன் அவர்களையெல்லாம் அது ஈர்த்தது?
Modern என்கிற ஆங்கிலச் சொற்பதத்தின் வேர்ச்சொல் எது என்பதில் இருந்தே வருவோமே. லத்தீன் மொழியின் ‘modo’ என்கிற சொல்லுக்கு ஆங்கில அர்த்தப் பதம் ‘Just now’.
‘இப்போது / இக்கணம்’ என்கிற ‘Just now’ அர்த்த அளவிலேயே.. இலக்கியத்துக்கான இலக்கணத்தை எல்லாம் தாண்டி.. அதனைச் சொல்லச் சொல்ல புதிதுதான் இல்லையா. கிட்டத்தட்ட ஜென் போல. அதாவது At very Present என்பார்களே, அப்படி.
கொஞ்சம் அசல் வரலாற்று காலத்தை.. டைம் மெஷினில் ஏறி ஒரு விசிட் அடித்துவிட்டு வந்துவிட்டால் மேற்கொண்டு பயணிக்க இலகுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த இரண்டாம் உலகப்போரின் விளைவும் அதன் தாக்கமும் உலகத்தையே மாற்றி அமைத்தது. இது நமக்குத் தெரியும். ஆனால், அதற்கு முன்னோடி காரணமாக இருந்த முதல் உலகப்போர் குறித்த கூடுதலான கவனமோ உற்றுநோக்குதலோ இல்லை.
ஆங்கிலத்தில் one leads to another என்பார்கள். இரண்டாம் உலகப் போருக்கு காரணமாக இருந்தது முதல் உலகப்போர். ஆகையால், அதையும் கொஞ்சம் பார்ப்போம்.
1914 – 1918 முதல் உலகப்போர் காலகட்டம். சொல்லப்போனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே நவீனக் காலத்திற்கான அடையாளங்கள் தோன்றத் தொடங்கிவிட்டன. அதாவது யதார்த்தத்துவம் என்கிற Realism –த்தை நவீனத்துவக்கூறுகள் மறுக்கத் தொடங்கிவிட்டன. நவீனம் அப்படியே இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்குள் நுழைந்த வேகத்தோடு பத்தாண்டு காலம் கடந்துவிட்ட நிலையில்.. முதல் உலகப்போர் அறிவிப்பு எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. பின்னர் இருபதாம் நூற்றாண்டு முழுவதும் நடக்கவிருக்கிற ஒட்டுமொத்த அசாதாரண சூழலுக்கும் அது ஒரு ட்ரெயிலரை ஓட்டிக்காட்டி விட்டது.
ஆக, இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளுக்குப் பிறகு 1914-ல் மூண்ட உலகப் போருக்கு பின்னணிக் காரணமாக இருந்தது எதுவென்று (சுருக்கமாக) சொல்லுவதென்றால்.. அதற்கு ஒரேயொரு பதில்தான் உள்ளது. அதிகாரம்.
அதுதான் தெரியுமே என்று மனதுக்குள் குறளி கத்துகிறதா? Well, என்னமாதிரியான அதிகாரம் என்பதைப் பார்க்கவேண்டுமா இல்லையா? பரவலாக இருந்த ‘ஆண்ட பரம்பரை அதிகாரம்’ ‘மன்னராட்சி முறை அதிகாரங்கள்’ [ஆனால் அது இப்போதும் பாக்கி உள்ளது].
அடுத்ததற்கு வருவோம்.
1939 – 1945 இது இரண்டாம் உலகப்போர் காலகட்டம். அது ஏற்படுத்திய மாபெரும் அழிவை மட்டும்தான் இன்றும் நினைவில் வைத்துக்கொள்ள நாம் கறாராக பயிற்றுவிக்கப்படுகிறோம். அது ஏன்? வேறொன்றை மறைக்கவோ அல்லது மறந்துவிடவோ திட்டமிட்ட ஒன்றுதான் அந்த ஏற்பாடு. அது என்ன?
முதல் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் நடுவே ஒரு காலகட்டம் இருந்தது.
1919 – 1939 வரையிலான இருபது ஆண்டுகள். வரலாற்றுக் குறிப்பில் Interwar Period என்று ஸ்டைலாக பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, ‘போருக்கு இடைப்பட்ட காலம்’.
சரி, இருக்கட்டும். அதற்கு இன்னொரு பெயர் உண்டு. அதுதான் இந்தக் கட்டுரைக்கு முக்கியமானதாக இருக்கக்கூடும்.
Roaring Twenties –இது Interwar Period–ஐ விட ஸ்டைலாக உள்ளது. அப்படியென்றால் என்னவென்று பொதுசமூகத்திற்கு அறிவுரீதியில் அடிப்படைத் தகவல்களாகக்கூட உலகின் மற்ற பகுதிகளுக்கு முறையாகப் போய்ச்சேரவில்லை. இந்த காரணத்தால்.. இன்றளவும் மூளைப்பகுதியில் அறிவுக்குரிய ஓரிடம் மழுங்கி இருந்தாகவேண்டிய அவசியத்தோடுதான் புதிய குழந்தைகள் பிறக்கின்றன என்று சொல்லுவேன். [Artificial Intelligence வந்துவிட்டிருக்கிற ‘இன்றைய’ நிலையில் இனி மாற்றம் ஆக வாய்ப்பு உள்ளது].
ஏனென்றால் தெற்காசிய நாடுகளுக்கு நவீன விஷயங்கள் வாழ்வின் பாணியாக வந்து சேரும்போது பெருவாரியாக நடுத்தர வர்க்க இளையோர் தலைமுறை அவற்றை ‘ஈயடிச்சான் காப்பி’யாக பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. மாற்றம் என்ற பெயரில் அது தலைநகரங்களில் ஆரம்பித்துவிடுகின்றது.
சரி, விஷயத்திற்கு வந்துவிடலாம்.
எதற்காக ‘ரோரிங் ட்வெண்டீஸ்’ என்றொரு நாமகரணம் சூட்டப்பட்டது?
அன்றைய சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களால் ஏற்பட்ட விளைவுகளின் ஓர் அடுக்கை அது குறிப்பிடுகிறது. அதற்குக் காரணம் எண்ணற்ற புதிய கண்டுபிடிப்புகள். பெட்ரோலியத் துறையில் தொடங்கிய வளர்ச்சி உலகம் தொழில்மயமாக அசுர வேகத்தில் உருமாற்றம் கொள்ள பாதை போட்டுக்கொடுத்தது. அதுவே நவீன உலகமாகவும்(Modernity World) கருதப்பட்டது. சார்லி சாப்ளின் தயாரித்து நடித்துப் புகழ்பெற்ற திரைப்படமான Modern Times-ஐ இங்கே நினைவுப்படுத்திக் கொள்ளலாம் பாதகமில்லை.
ஆனால், அந்த நவீனக்காலக்கட்ட சமூகத்தில் நடுத்தர வாழ்க்கை என்கிற ஒரு தனி வர்க்கம் உருவாயிற்று. The Class of Life & Class of status இரண்டின் மீதும் சாதாரண மக்களுக்கு கனவுகளும் ஆசைகளும் மோகங்களும் உருவாகத் தொடங்கின. அது இயல்புதானே? அந்த நடுத்தட்டு வர்க்கம்தான் அதிகமாகக் கவனப்படுத்தப்பட்டது. எனில், கீழ்த்தட்டு வர்க்கம் என்கிற ஒன்று ஓசையின்றி பெருகிக்கொண்டிருந்தது என்றுதானே அர்த்தம். இன்றும் அதுதான் நிலைமை.
ஒரே காரணம். உலகம் தொழில்மயம் ஆவதில் முனைப்போடு செயல்பட செயல்பட மனித சக்தியின் ஆற்றல் பெருக்கம் தொழிலாளர் என்கிற வர்க்கத்தை பெரிய அளவில் உருவாக்கியது.
ஒரு பக்கம் உற்பத்தி பெருக்கம். அதனுள்ளே பெரும் மனித உழைப்பு. அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சந்தைக்கு வரும்போது வகை பிரிகிறது. விலை நிர்ணயம் என்கிற அம்சம் மீண்டும் மீண்டும் நுகர்வாளரைக் கோருவது ஒன்றை மட்டும்தான். சொந்தமாக பொருளீட்டிக்கொள்ள மேலும் மேலும் கடின உழைப்பு. மன்னர்களுக்கு பதில் முதலாளிகள் உருவானார்கள். சாதாரண வயிற்றுப் பசிக்கான ரொட்டி யார் கையில் இருந்து விநியோகம் ஆகிறது என்கிற ஒரு கணக்கு இருக்கிறது அல்லவா?
(ஆனால் அதெல்லாம் இன்றுவரையிலும் மாறவில்லை என்பது இயல்பான ஒன்றல்ல)
சமூகப் பார்வைக்கோ கருத்து பகிர்தலுக்கோ உள்ளம் கொதித்து உணர்ச்சி மேலிடவோ அதனை அவதானித்து வெளிப்படுத்தவோ அதி நுணுக்கமான பார்வை அவசியமாகின்றது. அது ஒரு படைப்பாளியிடம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுணர்ந்து ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோகூட வாசகருக்கும் அதே பார்வை அவசியமாகின்றது. அதற்கான பயிற்சி முக்கியம்.
அதனைச் செய்கிறோமா என்பது கேள்வி. செய்ய வேண்டும் என்பது விருப்பம்.
கலை இலக்கியங்கள் மற்றும் வாழ்வின் போக்குகள் வெகுவான மாற்றத்திற்கு உட்பட்டிருந்த அந்நவீன உலகில்.. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை முக்கியத்துவம் பெற்றிருந்த எளிய விதிகளான..
தனிமனிதனின்- அறம் குறித்த பிரக்ஞை / ஒழுக்கம் சார்ந்த நம்பிக்கைகள் / நீதி பரிபாலனங்கள்..
போன்றவை முதல் உலகப்போரின் நீட்சியிலேயே.. கேள்விக்குள்ளாகின. சொல்லப்போனால் கைவிடப்பட்டன.
அப்படியென்றால் நம்மிடம் வகைப்பிரித்து வைக்கப்பட்டிருக்கும் ‘கிளாஸிக்குகள்’ என்பவை எவை? அல்லது அவை ஏன் கிளாஸிக்குகள்? என்கிற அதிமுக்கிய கேள்வியை இந்த வரலாற்றுப்பார்வை எழுப்புகிறது.
மரபுகளைத் தவிர்க்கத் தொடங்கிய அந்தக் காலகட்டம் அடுத்து எதிர்கொள்ள இருந்தது இரண்டாம் உலகப் போரை என்பதில் கவனம் வைத்தனவா? சாதாரண மனிதனுக்கு அது தெரியாது. அவன் தினப்படி ரொட்டிக்காக, உயிர் வாழ்வதற்காக அலைந்துகொண்டிருந்தான். கடுமையாக உழைத்தான். அவனிடமிருந்தவை இரண்டு தான். ஒன்று கனவு, இன்னொன்று நம்பிக்கை.
ஆனால் அது மூர்க்கமாகத் தகர்க்கப்பட்டது.
அதிகாரம் தம்மை வலுப்படுத்திக்கொள்ள பேராசைக்கொள்ளும்போதே.. முதன்மையாக பசி தான் இலக்காகிறது. அது கச்சிதமாகக் குறிவைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போர் அழிவின்போது பறிபோன உயிர்களின் எண்ணிக்கையோடு சேர்த்து கணக்கில் வைத்துப் பார்க்க வேண்டியது முழுமையான ஆறு வருடங்களை. போர் முடிவில்.. கொஞ்ச நஞ்ச ஒழுக்க விதிகளோ அல்லது வாழ்க்கை மீதான நம்பிக்கையோ சுத்தமாக இல்லாமல் போய்.. அதிகார வர்க்கத்தின் கீழ் அம்போவேன்று நிற்க நேர்ந்த ஒரு தனிமனிதன் அல்லது சமூக மனிதன் என்ன ஆகியிருப்பான்?
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான சிந்தனை வடிவம்தான் நவீனத்துவம் (Modernism) என்று வரிந்துகொள்ளப்பட்டது. அந்த நவீனத்துவம்.. பல பரிசோதனை முயற்சிகளின் ஒரு கூட்டுக்கலவை. அது, கலை வடிவங்கள், இலக்கிய வடிவங்கள், தத்துவம் என்று அனைத்தின் மீதும் படர்ந்தது. புதிதாக அனைத்தும் புனரமைக்கப்பட வேண்டிய அவசியமோ மாற்றியமைக்க வேண்டிய தேவையோ உருவாகிவிட்டது.
உருக்குலைந்திருந்த குடும்ப அமைப்புகள் மீண்டும் உருவாக வேண்டும். அதுதான் அடுத்து எழவிருந்த சமூக அமைப்பும்கூட. ‘நாளை’ மீது நம்பிக்கை வளரவேண்டும். ஆனால், அத்தனை விழுமியங்களும் கொட்டிக்கவிழ்க்கப்பட்டுவிட்டது. மீண்டும் சிறு சிறு குழு அமைப்புகளாக மனித இனம் பிரிந்து, பின்னோக்கி சிதைந்து போவதற்கான நியாயமான காரணங்கள் உருவாகியிருந்தன. அது நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. இதனூடே உலகப்போர் காலகட்டங்களில் உருவானவைகளில் ஒன்றுதான் Neo-Realism. அது தொழிலாளர் வர்க்கத்தின் அன்றாடங்களை கலை, இலக்கியம், தத்துவமாகக் கவனத்தில் எடுத்துக்கொண்ட போக்கிற்கு முக்கியத்துவம் உண்டு. Neo-Realism.. பத்தொன்பதாம் நூற்றாண்டின் யதார்த்தவாதத்தின் (Realism) அடுத்த வடிவம். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் இத்தாலியில் பரவலாக வளர்த்தெடுக்கப்பட்ட ஒன்று.
அதற்கு சிறிய உதாரண சினிமா ஒன்றைச் சொல்லலாம். 1948-ல் விடோரியா டி சிகாவின் இயக்கத்தில் வெளியான இத்தாலிய திரைப்படமான ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ .
அதற்கும் முன்னதாக ‘இப்போதை’க்கான வாழ்வு குறித்து, நம்பிக்கை குறித்து ஒவ்வொன்றும் முக்கியத்துவம் அடைந்தது. அதில் தொழில்மயம், அரசியல், பொருளாதாரம், தத்துவம் என Whatever ‘New’ was considered.
அதுதான் நடந்தது. இன்றும் தொடர்கிறது.
இது ஒவ்வொரு கண்டத்தின் நிலப்பரப்பின் மீதும் புதுப்புது வகைமைகளில் தம் அதிகாரத்தின் நேசக்கரங்களை நீட்டிக்கொண்டு வந்து சேர்ந்துள்ளது. அவற்றின் ஒப்பந்த கைக்குலுக்கல்களில் அர்த்தங்கள் மாறின. உரிமையின் அளவுகோல்கள் மாறின. வாழ்வாதாரம் மாறியது. பொருளாதாரம் மாறியது. உழைப்பும் உற்பத்தியும் வேறாகின. கூலி, ஊதியம், லாபம் என்கிற வித்தியாசத்தில் வாழ்க்கை புதிது புதிதாக அன்றாடத்தை வடிவமைத்தது.
இங்கே நிறுத்திக்கொள்வோம்.
அவை யாவும் பேசுபொருளாகும்போது அல்லது படைப்பிற்கு கருப்பொருளாகும்போது ஒரு தனிமனிதனின் படைப்பு மனம் எந்தக் கோணத்தில் சிந்தனையைப் பாய்ச்சும் என்பதும் ஒரு சமூகமனிதனின் படைப்பு மனம் எந்தக் கோணத்தில் தன் சிந்தனையைப் பாய்ச்ச வேண்டும் என்பதும் வெவ்வேறு அலகுகளை நிர்ணயிக்கும்.
அது ஒரு Choice of thinking & Choice of writing. உரிமை அளவில் ஜனநாயக ரீதியில்.. பேச்சு, எழுத்து, கருத்து சுதந்திரம் என்பதில் இருபத்தியோராம் நூற்றாண்டின் அளவுகோல்கள் Just now ஒரு விருப்பத் தேர்வு மட்டுமே.
ஆனால்-
நவீனத்துவக் கவிதை வடிவத்துக்குள் கவித்துவமாக இயங்குகின்ற சிறு கருவிகள் & உப கருவிகள் போன்றவை கவனிக்கப்பட வேண்டும் என்பது இங்கே என்னுடைய பரிந்துரை. அவை மேலோட்டமாக இல்லாமல் சற்றே ஆழமாக, நுணுக்கமாக இருக்க வேண்டும்.
அதற்குரிய கண்டடைதலை நோக்கி வாசகரும் முன் நகர்ந்து வந்தாக வேண்டும். இல்லை என்றால் ஒரு கலைப்படைப்பை ஒதுக்கித் தள்ளுதலோ அல்லது குறிப்பிட்ட கலைப்படைப்பை விட்டு ஒதுங்கிப் போதலோ இனியும் சர்வசாதாரணமாக நடக்கவே செய்யும். (நாம் இசை, ஓவியம் குறித்தெல்லாம் இன்னும் பேசவே இல்லை)
சரி. Back to the subject, நவீனத்துவக்கவிதைக்கான..
கவித்துவத்தில் ஒரு சிறிய முக்கியமான விஷயத்தை இப்போது பார்ப்போம்.
அகம் X புறம் எப்படியோ.. அப்படியே தான் ரூபம் X அரூபம்.
மனித புலன்களால் தொடக்கூடியது, பார்க்கக்கூடியது போன்றவைக்கு பருப்பொருள்கள் எளிமையாக உதவுகின்றன. அவைகளை ரூப வடிவம் எனலாம் அல்லது ஸ்தூல வடிவம் எனலாம். அதற்கொரு தகவல் அறிவோ, படிப்பறிவோ போதும். ஒரு பொருளை அதற்குரிய பெயரால் சுட்டிக்காட்டத் தெரிந்திருந்தால் போதுமானது. அதன் பயன்பாட்டை மூளை உபயோகப்படுத்த தயாராகிவிடும். சிந்தனை, தம்முடைய படைப்பாக்கத்திற்காக உடனடியாக அதனை எடுத்துக்கொள்ளும். அது சிம்பிள் லாஜிக் தான்.
ஆனால்-
தொடமுடியாத, கண்ணால் காணமுடியாத உணரமட்டுமே நம் மூளை அனுமதிக்கின்ற ‘அரூபத்தை’ என்ன செய்வது? அது சவாலான விஷயம் அல்லவா?
புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அன்றாட வாழ்வின் பயன்பாட்டில் சிறப்பான இடத்தையும் பிடித்துக்கொண்டதால் அதன் நவீனத்தின் மீதுள்ள மனித ஆசை & மோகம் இரண்டுமே நுகர்வு தகுதி என்கிற அளவைப் பிரதானப்படுத்துகின்றது.
இருபதாம் நூற்றாண்டு முழுவதுமே வளர்ச்சி என்பதும் Modern World என்பதும் ஒன்றே. இதோ, இருபத்தியோராம் நூற்றாண்டு வரையிலுமே அதுதான் நிலை. ஆனால், அதுனுள்ளே பல வகைமைகள் எடுத்தாளப்பட்டுள்ளன. அர்த்தப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்தும் நவீனத்துவத்தின் கணக்கில் வந்துவிடும். அது இப்போது தவிர்க்க முடியாத அம்சமாக நம்மோடு (சமூகத்தோடு) ஒன்றென கலந்துள்ளது.
இன்றளவில் அது வீட்டிற்குள்ளோ அலுவலகத்திலோ கூட்டுப் புழக்கத்திற்கு அல்லது பொது புழக்கத்திற்கு என.. Refrigerator, Visual monitors, Oven, Bluetooth speaker box, Desktop Computers, Tread mill, A/c, Remote operating ceiling Fan, Biometric Lock system, Coffee machine, Water filter, Vacuum Cleaner, Digital Clocks, Alarm systems, Cars, Motor Bikes, Inverters, Lift, Stationery items etc., போன்ற சாதனங்களாகவோ..
அல்லது தனிமனித உபயோகத்திற்கு என்று கையோடு கொண்டு போகின்ற Lap tops, Mobile phones, Tablets, Smart watches, Magnetic Strip Cards, Blue tooth earphones, etc., போன்ற சாதனங்களாகவோ.. இருக்கும்போது அவைகளைத் தொடர்ந்து அனுமதிக்கும் தன்மை நவீனத்துவத்தின் எந்த கலை வடிவத்திற்கும் உண்டு.
அதிலும் நவீனத்துவக்கவிதை எளிதாக இவற்றை தம் பயன்பாட்டிற்கு அனுமதிக்கும். படைப்பாளியோ வாசகரோ இந்த அறிதலின் அளவைப் பொருத்தே படைப்புத் திறனோ அல்லது வாசகத் திறனோ உள்ளது.
இந்தச் சிந்தனை வரிசையில்.. இருபத்தியோராம் நூற்றாண்டு மனித வாழ்வின் இன்றைய போக்கில்.. ‘குளோபல் வில்லேஜ்’ என்று நம்மிடையே புழங்கும் எலக்ட்ரானிக் பதம் அதிமுக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் ஆகும்.
நவீனத்துவம் ‘இப்போது’ என்ன உண்டோ அதனைப் பயன்படுத்துகின்றது. அது, பழையவற்றை முற்றிலும் நிராகரிப்பது இல்லை, விதிவிலக்காக ஓரிரு வருடங்களை அனுமதிக்கின்றது. அதற்கும் முந்தையவற்றிற்கு (பொருளோ கருத்தோ) சர்வநிச்சயமாக முக்கியத்துவம் குறைந்துவிடுகிறது.
நவீனத்துவத்தைப் பொருத்தவரையில் ‘Just now’ என்பது ஒரு தாரக மந்திரம் போல உள்ளுக்குள் ஒலித்தாக வேண்டியிருக்கிறது. மாறாக, குறிப்புணர்த்துவதோ அல்லது பூடகமாகச் சொல்லுவதோ மட்டுமே நவீனத்துவத்தின் குறிக்கோள் அல்ல. அதெல்லாம் ஓர் இடைநிலை உத்தி மட்டுமே.
ஒரு நவீனத்துவக் கவிதைக்குள் இவற்றைக் கண்டடைவதற்கான பயிற்சியை ஒரு வாசகர் மேற்கொள்ளும்போது அவருக்கான திறப்புகள் புதிய அனுபவங்களை வழங்குகின்றன.
ஸ்தூலமான (ரூபமான) பொருட்களை பயன்படுத்தும் எளிய முறையில் இருந்தே கவித்துவம் வேறொரு தளத்திற்கு நகர்ந்திருப்பதை கண்டுகொள்ளலாம்.
இங்கே-
முதல் இரண்டு அத்தியாயங்களில் உரையாடலுக்கு எடுத்துக்கொண்ட கவித்துவத்திற்கான கருவிகளை சிறு நினைவூட்டல் செய்கிறேன்.
- படிமம் (Image)
- உருவகம் (Metaphor)
- மைய உணர்ச்சி (Emotion)
- உணர்வு நிலை (Mood)
- உடல் & புலன்களால் உணர்தல் (Feelings)
இவை எடுத்தாளுகின்ற புறப்பொருட்கள் எங்கெங்கேயெல்லாம் எப்படியெப்படி ஒரு நவீனத்துவக் கவிதைக்குள் இடம்பெறுகின்றன என்பதைக் காண முயற்சிக்கலாம்.
2018-ல் எழுதி முகநூலில் பகிர்ந்துகொண்ட என் கவிதை இது.
- அமைப்பின் ஆகக் கடைசிக்குப் பிறகு..
அதைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தோம்
கடந்து செல்பவை
வாகனங்கள் அல்ல யந்திரங்கள்
ஷாப்பிங் போவது ஒரு சடங்காகிவிட்ட காலத்தில்
யாவற்றின் மீதும் ஒட்டப்படுகிற விலைப்பட்டியல்
தரம் குறித்த உரையாடலை உற்பத்தி செய்கிறது
நம் அணுக்க நிலைக்கும் அப்பால்
உத்வேகம் ஏதும் அறிந்திராத
ஒரு சாதாரண புன்னகையின் ஓரம் கூட
நிறம் மாறி துருவேறுவதை கண்டிருந்தோம்
டிஜிட்டல் சேகரிப்புகள்
கெகா பிட்களில் ஞாபகங்களை சேமித்து
வைத்திருப்பதாக
உத்தரவாதமளிக்கின்றன
உருவங்களும் ஒலிகளும் புணரும் உலக
சிருஷ்டிக்குள்
அடையாளமாகத் துருத்துகிறது
வேறு வேறாகிப் போக விரும்பாத உணர்வுக் குவியல்
கைப்பற்றி தோளணைத்து பெறுகிற உதடு
முத்தங்கள்
இதயம் முழுவதும் ரத்தம் பாய்ச்சுவதில்லை
பூமியிலிருந்து கால்களைப் பெயர்த்து
மேகங்களுக்கு நடுவே தூக்கிவிடுவதில்லை
பிக்ஸல்கள் கூடிய முன் பக்க கேமராக்கள் மட்டுமே
அண்ணாந்து பார்த்தபடி வெட்கப்பட்டுக்கொள்ள
நிர்ப்பந்திக்கின்றன
மென் தொடுதல் யாவற்றையும் பரிந்துரைக்கிறது
கொஞ்சம் எல்லாவற்றையும் அனுமதிக்கிறது
கத்திரி வெயிலோ திடீர் மழையோ
காகம் கரைதலோ
கேபிள் வயரில் சுருண்டு சிக்கி காற்றில் அசையும்
மயிர் குப்பையோ
மாறுவதில்லை
***
இக்கவிதை..
படிமம், உருவகம், மைய உணர்ச்சி, உணர்வுநிலை, உடல் & புலன்களால் உணர்தல் – ஆகிய ஐந்து கவித்துவக் கருவிகளையும் மொத்தமாய் தம்முள் வைத்திருக்கிறது.
வரலாற்றுப் பாடம் போல.. நவீனம் / நவீனத்துவம் குறித்து கொஞ்சம் விஸ்தரித்து பேசியதின் சாராம்சத்தை இங்கே அடையாளங்காண முடிகிறதா என்பதை சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.
இரண்டு நூற்றாண்டு போக்குகளின் நீட்சியாக எந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். என்னவாக நின்றுகொண்டிருக்கிறோம் என்பதையே ஒரு பாடுபொருளாக்கிட செய்த முயற்சிதான் இந்தக் கவிதை.
- படிமம் இறுதியில் உருவகமாகத் திரளும் இடமாக ஒன்று உள்ளது. [அணுக்க நிலை/ உத்வேகம் ஏதும் அறிந்திடாத/ சாதாரண புன்னகையின் ஓரம்..] –அது நிறம் மாறி துருவேறும் இடத்தில் உருவகமாகிறது.
- இயந்திரங்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் சூழ நகரும் இந்த வாழ்வின் ஊடே உணர்வுநிலை என்னவாக இருக்கின்றது?
- அரசியலின் உப பகுதியான பொருளாதாரம்.. சந்தையில் தம் இருப்பை எப்படி நம் மீது இணக்கம் மாதிரி பாவ்லா செய்து ஆதிக்கம் செலுத்துகின்றது? அதிலிருந்து தப்ப முடியுமோ முடியாதோ சாதாரண மனித உணர்ச்சியின் நிலையை அடையாளப்படுத்த எத்தனிக்கிறது இக்கவிதை.
- மாற்றங்களுக்கு நடுவே மாறாதவையும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் இயற்கை அலகுகளாக –கத்திரி வெயில், திடீர் மழை, காகம் கரைதல் –இருக்கின்றன. நடைமுறை அலகுகளாக –கேபிள் வயர், மயிர் குப்பை –இருக்கின்றன.
- அதில் கேபிள் வயர் –ஓர் உற்பத்தி சாதனம். அந்தக் கேபிள் வயரில் மயிர்க்குப்பை சிக்கிக்கொண்டு இருப்பதில் அரூபமாக உணரப்படுவது எதுவென்றால், ஒரு மனிதப் பழக்கம். Human behavior (Individual or Mass).
- மீண்டும் அங்கிருந்து வாசிப்பு மனம் கவிதையின் தொடக்கம் நோக்கி போகுமென்றால்.. ‘அமைப்பின் ஆகக் கடைசிக்குப் பிறகு..’ அதைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தோம்.. என்பதாக மீண்டும் தொடங்கி.. கடைசி நோக்கி வந்து சேரும்.
இந்தக் கட்டுரையின் இறுதி உதாரணத்திற்கு இந்த ஒரு கவிதை போதும் என்று நினைக்கிறேன். இக்கவிதை ஒவ்வொரு வாசகருக்கும் அவருடைய தனிப்பட்ட அறிதல், உள்வாங்கிக்கொள்ளும் முறைகள், அடிப்படைத் தகவல் அறிவு, கூடுதல் தகவல் அறிவு போன்ற நுகர்வின் அலகுகளைப் பொருத்து வெவ்வேறு திறப்புகளை Point of View–களை நிச்சயமாகக் கொடுக்கும் என்றும் நம்புகிறேன்.
தொடர்ந்து பேசுவோம்.
ஆழமான கட்டுரையாக இந்த பகுதி அமைந்திருக்கிறது. இப்போதைய எனது ஒரே ஒரு கேள்வி. இன்குலாப் எழுதிய அரசியல் கவிதைகள் நவீனத்துவ கவிதை தானே.
வணக்கம் சிவரஞ்சனி தோழர்.
முதலில் நன்றி.
உங்களின் கேள்வியின் வழியே நானொன்றை கண்டடைய விரும்புகிறேன்.
நீங்கள் தொடரை வாசித்துக் கொண்டிருப்பவர் என்கிற அடிப்படையில்..
இன்னும் கூட சற்று காத்திருந்தோ.. அல்லது இப்போதே கூடவோ.. உங்கள் கேள்விக்கான பதிலை நீங்கள் இங்கே தெரியப்படுத்தலாம்..
மகிழ்வேன்.