cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 33 கவித்துவம், கவிதை, கவிஞன் தொடர் கட்டுரைகள்

கவித்துவம், கவிதை, கவிஞன் [பாகம் 8]

Getting your Trinity Audio player ready...

ஒரு கலைஞனானவன் கண்களை மட்டுமல்ல 

தன்னுடைய ஆன்மாவையும் கட்டாயமாக 

பயிற்சிப்படுத்திட வேண்டும். 

வஸிலி கன்டின்ஸ்கி
(ருஷ்ய ஓவியர்)
1866-1944

ண்ணங்களை முன்னெடுத்து வைப்பதற்கு நம் கையில் மொழி உள்ளது. அம்மொழி, ஒலி அளவுகளையுடைய ஓசை வடிவிலும் எழுத்து வடிவிலுமென இரண்டுமாக உள்ளது. நாம் நம்முடைய மனத்தில் நினைப்பவற்றை பேசவோ எழுதவோ தலைப்படுகிறோம். எழுத்து வகைமையில் எண்ணத்தின்வழி எழுகின்ற சிந்தனையை சாரமுள்ளதாக்கிட தொடர்ந்து எத்தனித்துக் கொண்டிருக்கும் நமக்கு தற்கால மொழி ஈன்ற கொடையாக நவீனத்துவக்கவிதை இருக்கிறது என்று வைத்துக்கொண்டேமேயானால்.. எந்த கணத்தை நாம் உணரத் தூண்டப்படுகிறாமோ அக்கணம் நமக்குள்ளே தேங்கிவிட ஏதேனும் ஓர் அடிப்படை, ஓர் உத்தி அவசியப்படுகின்றது.

சொல்வதை விரிவாக விவரித்து சொல்லிக்கொண்டிருந்த காலம், நூற்றாண்டுதோறும் மெல்ல மெல்ல உருமாற்றம் பெற்று இந்நிலைதனை வந்தடைந்திருக்கிறது. குறிப்பாக அதன் இன்றைய போக்கில் முழுமையாக ஒரு நூற்றாண்டு வித்தியாசம் இருக்கிறது. அதற்கு காரணம், நவீனம் என்கிற பயன்பாட்டு கருத்தாக்கம் வாழ்வின் அனைத்தின் மீதும் படிந்துள்ள விதம் அப்படியானது. எனவே அத்தொடர்ச்சியில்.. எதுவாகினும் சொல்லுவதை சுருங்கச் சொல்லுதல், எண்ணத்திலிருந்து குறிப்புணர்த்தி வெளிப்படுதல் என நவீனத்துவம் சார்ந்த பலவும் இன்றைய தேதிக்கு நம்மிடையே அன்றாடப் புழக்கத்திலேயே வந்துவிட்டது.

தொழில் நுட்ப முன்னேற்றத்தின் உச்சமாக இருபத்தியோராம் நூற்றாண்டை வரிந்துகொண்டால், ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்பாட்டிற்கென சாஃபட்வேர் புரோகிராம்களில் எழுதி வடிவமைக்கப்பட்டுள்ள ‘எமோஜி’ பொம்மைகள் மனித உணர்வு வெளிப்பாட்டிற்கு உகந்த குறியீடுகளாக, மாற்று பதிலிகளாக உபயோகத்திற்கு வந்துவிட்டன. அவை, தவிர்க்கமுடியாத விளைவுகளை நமது தனிமனித எண்ணங்களில் Bypass ஆக உற்பத்தி செய்கின்றன. அதிலிருந்து ஒன்று மற்றொன்றை உள்வாங்கி செரித்து வேறொன்றை பிரதிபலிக்கிறது. அதனால் நாம் புதிய அனுபவங்களை ஈட்டுகிறோம்.

பொதுவாக, ஒரு வினைக்கு எதிர்வினை ஆற்றுவதில் நமது உணர்வுநிலைகளும் (Moods) மைய உணர்ச்சிகளும் (Emotions) மாற்று வடிவம் கொண்டுள்ளன. இதுவரை அறிந்திராத இன்ப துன்பங்கள் தனிமனித வாழ்வில் புலப்படுகின்றது. அவைகளையொட்டி அறிதல் முறைகளில் உருவாகின்ற சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களுக்கு புதிய வழிநடத்துதல் அவசியமாகியுள்ளது. அதனால், இயல் சார்ந்த புதிய துறைகள் உருவாகின்றன. அவற்றைக் குறித்த நவீன சமூக அறிவு நமக்குள் புகுத்தப்படுகிறது. எனவே அது முதற்கண், கல்வித்திட்டங்களுக்கும் முன்னோடியான கலையம்சங்களில் வெளிப்படுகின்றது.

இவ்வகை காரணங்களாலும்.. எதையுமே விரிவாகச் சொல்லப்படுவதில், விளக்கப்படுவதில் விருப்பமற்ற உயிரிகளாக நாம் தற்சமயம் பரவலாக மாறிக்கொண்டிருக்கிறோம்.

விஷயம் இதுதான் நாம் ஏறக்குறைய அனைத்தையுமே சுருங்க விளங்கிக்கொண்டாக வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். அது அவசியம்தானா என்கிற கேள்விக்கே இனி இடமில்லை. எதையுமே உள்வாங்கிக் கொள்ளவோ அல்லது கூர்ந்து அவதானிக்கவோ, அததற்குரிய துணைக்கருவிகளும் தேவைப்படுகின்றன.

●●●●

ந்த அத்தியாயத்திற்கான துணைக்கருவி ‘அப்ஸ்ட்ராக்ட்’ (Abstract):

இந்தச் சொல் கலை, இலக்கிய வகைமைகளில் முக்கியமானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய அப்ஸ்ட்ராக்ட், இருபதாம் நூற்றாண்டின் பயன்பாட்டிலிருந்து நாளதுவரையில் ஒரு முழு நூற்றாண்டைக் கடந்த நிலையிலும் வெவ்வேறு துறைகளிலும்கூட முக்கியமான பங்காற்றி வருகிறது. நமக்கது தெரிந்திருந்தாலும் தெரியாமேலே கடந்து போய்க்கொண்டிருந்தாலும் அதன் தரத்தகுதி மெருகேற்றப்பட்டுக்கொண்டே இருக்கும். அதுவும், இன்றைய Chat GPT போன்ற ஏ.ஐ தொழில் நுட்பம் ஈந்துள்ள மென்பொருள்களின் பங்களிப்பில் அப்ஸ்ட்ராக்டின் பங்களிப்பு என்னவென்பதை வெகு விரைவில் புதிய கோணத்தில் புதிய விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பமானது சமூகப் பொதுவெளியைப் பொறுத்தவரையில் தொலைவில் இல்லை என்பேன்.

மட்டுமன்றி, நமது தனிமனித மனம் மற்றும் கூட்டு மனம் எப்போதுமே எதிரெதிரே மல்லுக்கட்டி பழகிய நிலைகளை நமது மனிதமூளையின் நினைவடுக்கிற்குள்ளே இன்னும் இன்னுமென பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டிய காலமிது.

அவ்வாறு நோக்கிடும்போது, இந்த அப்ஸ்ட்ராக்டை நாம் தவிர்த்துவிடலாகாது.

சரி போகட்டும், நாம் இப்போது நவீனத்துவக்கவிதைக்குரிய கவித்துவப் பகுதிக்குள் நுழைவோம்.

நமது அறிவால் தெரிந்து, புரிந்துகொள்ள முடிகிற பருப்பொருள்களை (Concrete Object) கவித்துவத் தேவைக்கேற்ப ஓர் உவமைக்காகவோ அல்லது ஓர் உருவகத்திற்காகவோ பயன்படுத்துவது என்பது அடிப்படையான விஷயம்தான். ஆனால், ஒரு யோசனையை அல்லது சுயத்திலிருந்து உணரவேண்டி எழுகின்ற தனிப்பட்ட மனோநிலையை அல்லது ஒரு தகுதிக்குரிய மதிப்பீட்டை கருத்தாக்கமாக்குவது (Conceptualization) என்பது அப்ஸ்ட்ராக்ட் ஆகிறது. அதன் தன்மையின்படி அது ஒரு வடிவரீதியிலான பருப்பொருளாகவோ அல்லது எதார்த்தமான ஸ்தூலமாகவோ நிச்சயமாய் வெளிப்படாது.

எளிமையாகச் சொல்வதென்றால் ஒரு பருப்பொருளின் (Concrete Object) எதிர்த்தன்மையை அப்ஸ்ட்ராக்ட் கொண்டுள்ளது. அதனை நமது கண்களால் பார்க்க முடியாது. ஆனால், நம்முடைய பயன்பாட்டிலிருந்து விலக்க முடியாத அளவிற்கு ஓர் அர்த்தமாக அதனை நாம் உணர்ந்திட முடியும்.

அப்ஸ்ட்ராக்ட் என்கிற கலையம்ச உத்தி, நவீனப்பாணி ஓவியத்தில் செயல்படுவதற்கும் நவீனத்துவக் கவிதைவெளிக்குள் செயல்படுவதற்கும் உள்ள வித்தியாசம் முக்கியமானது. இரண்டிற்கும் பொதுவானது என்று ஒன்றினைச் சொல்லலாம்.

அது படைப்பாளியின் மனம்.

நவீனப்பாணி ஓவியத்தில் படைப்பு மனத்தின் அப்ஸ்ட்ராக்ட் வெளிப்பாட்டு முறைமையை வண்ணங்களும் வடிவங்களும் குறுக்குமறுக்குத் தோற்றக்கோடுகளும் சிலத் தொடுவகைமைகளும் கூட பிரதிபலிக்கின்றன. சொல்லப்போனால், ஓர் ஓவியக் கண்காட்சி வளாகத்தினுள்ளே பார்வையாளனுக்கு அவை (Abstract Art) ஒரு படைப்பாக்கமாக இறுதியில் காணக்கிடைப்பவை. அதில், ஓசைநயத்திற்கோ மொழியளவைகளான ஒலிவடிவிற்கோ கிஞ்சித்தும் இடமில்லை. ஆங்கே, மொழி கடந்து உலகு தழுவிய பொதுமனிதப் பார்வையும் வரையறைகளுக்கு உட்பட்ட ஒரு படைப்பு மனமும் சங்கமிப்பதற்கான அதிகபட்ச சந்தர்ப்பம் உள்ளது.

ஆனால், நவீனத்துவக்கவிதையில் சொற்களையும் அவை சுமந்திடும் அர்த்தங்களையும் படைப்பாளி தன் மனத்தினூடே அப்ஸ்ட்ராக்டாக கையாள்வதற்கென, தான் பிரத்யேகமாக தேர்ந்தெடுத்துக்கொள்ளும் கருத்தாக்கத்தோடு கச்சிதமாக வெளிப்பட்டாக வேண்டும். அது கவிஞருக்கு மொழிரீதியான சவாலும் கூட. இங்கே வாசகரோடு படைப்பின் அடிப்படையில் பரஸ்பரம் பரிமாற்றம் நிகழ இருமுனைகளிலும் மெனக்கெடல் ஒன்று அவசியமாகிறது.

சரி, மேலும் இந்த அப்ஸ்ட்ராக்டை விளங்கிக்கொள்ள ஓர் உதாரணத்தை முயற்சித்துப் பார்க்கலாம்.

இதற்கு, Conceptualization எனப்படுகின்ற ‘கருத்தாக்கம்’ என்கிற சொல்லையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இச்சொல்லிற்குரிய எந்த புறத்தோற்றத்தையும் நம்மால் காண முடியாது. ஏனென்றால் அதற்கு பருவடிவம் கிடையாது. அதற்கான அர்த்தமாக ஒரு புரிதல் மட்டுமே நம்மிடம் அகராதி தொகுதிக்குள் காணக் கிடைக்கிறது. ஏனெனில், அடிப்படையில் ‘கருத்தாக்கம்’ என்பதுவுமே ஒரு ‘யோசனை’தான். It’s just an ‘idea’.

எனவே அதன் ‘அர்த்தத் தளத்தையே’ கவித்துவத்திற்கென ஒரு அப்ஸ்ட்ராக்டாக நாம் வெளிப்படுத்திட நினைக்கும்போது, நமக்கு ஓர் உத்தி தேவைப்படுகின்றது அல்லவா? முந்தைய அத்தியாயங்களில் ஏற்கனவே நாம் பகிர்ந்துகொண்ட கவித்துவக் கருவிகளில் ஒன்று உவமை (Simile). அதன் துணையோடு இந்த ‘கருத்தாக்கம்’ என்கிற அப்ஸ்ட்ராக்டான சொல்லை இப்படி உவமைப்படுத்தலாம்.

‘கருத்தாக்கம் ஓர் உலர்ந்த திராட்சையைப் போன்றது’

எதனால் அது உலர்ந்த திராட்சையைப் போன்றது? காரணம், அது மிகவும் செறிவுள்ளது. அதாவது, ‘கருத்தாக்கம்’ என்கிற Conceptualization தன்வயமுள்ள பாடுபொருளுக்குரிய அர்த்தத்தின் சாரத்தை மட்டுமே கையாளப் பயன்படுகின்ற ஒன்று. இங்கே அதனை, பருப்பொருளான ‘உலர்ந்த திராட்சையோடு’ ஒப்பிட்டுச் சொல்லும்போது..

திராட்சைப்பழத்தின் நீர்ச்சத்து நிறைந்துள்ள திரட்சி மொத்தமும் நம் மனக்கண்ணிற்கு வந்து, பின்னர் அதன் நீர்ச்சத்து முற்றிலும் (வெளியேற்றப்பட்டு) வற்றி உலர்ந்து செறிவுடன் கெட்டித்திருக்கும் எதிர்வடிவமும் நமது மனக்கண்ணிற்கு வந்துவிடுகிறது. அப்படியந்த திராட்சைப்பழத்தின் படிநிலை உருமாற்றங்கள் கிட்டத்தட்ட இத்துடன் பொருந்திப் போகுமென்றால்.. நாம் தேர்ந்தெடுத்துக்கொண்ட உவமை, ‘கருத்தாக்கத்திற்கான’ பருப்பொருள் வடிவமாக அதே மனக்கண்ணில் தோற்றம்கொள்ளவும் உதவும். சரிதானே?

சரி, அடுத்து-

ஓர் எளிமையான உதாரணத்தை நீங்களாகவே முயன்று பார்க்கலாம்.

‘அழகு’, ‘உண்மை’ என இரண்டு தனித்தனி சொற்கள் நம்மிடம் புழக்கத்தில் உள்ளன. அவை குறித்த ஆழமான பார்வையை இதுவரையில் அவற்றை நெருங்கிப் போய் பார்க்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படாமல் இருந்திருக்கலாம்.

ஆனால், இவையும் அப்ஸ்ட்ராக்டாக மட்டுமே நம் வசம் இருந்துள்ளன என்றால் நம்ப முடிகிறதா? அப்படியென்றால் நம் பொதுபுத்தியில் அவற்றிற்குரிய ஓர் அர்த்தத்தை காலம்காலமாக சுமந்தபடி நம்முடைய பயன்பாட்டில் வைத்திருக்கிறோமே.. அது ஏன்? ஆம் அப்படித்தான் வைத்திருக்கிறோம் என்று ஒப்புக்கொண்டால், அவற்றை எப்படி நமது கண்களால் தரிசிப்பது? அவற்றிற்கென பொதுவான வடிவங்கள் ஏதேனும் உண்டா?

கிடையவே கிடையாது.

அதேவேளை-

ஒவ்வொருமுறையும் வெவ்வேறு மனவெழுச்சிகளால் அவை நம்மிடையே தொடர்ந்து காட்சிப்படுகின்றனவே, அது எப்படி?

இவ்வாறான குட்டிக் குட்டி கேள்விகளைப் பின்தொடர்ந்து இதே ரீதியில் உள்ள வேறு பல சொற்களை நோக்கி ஒரு தனிப்பட்ட தேடல் தொடங்கும்போது இதுவரை வாசிப்பில் இருந்த, இனி இருக்கப் போகின்ற எந்தவொரு நவீனத்துவக் கவிதைக்குள்ளும் ஓரளவிற்கு எங்கெல்லாம் ‘அப்ஸ்ட்ராக்டாக’ கவித்துவ மனம் வெளிப்பட்டுள்ளது? அது எவ்வாறு சொற்களாகியுள்ளது? என்பதை கொஞ்சம் சிரமமின்றி அடையாளங்கண்டு கொள்ளலாம்.

அடுத்ததாக-

2013 ஏப்ரலில் என் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டு ஒரு கவிதையைப் பார்ப்போம்.

  • மௌனத்துக்குரிய விளிம்புகள்

ஒரு மௌனத்துக்கும்
இன்னொரு மௌனத்துக்குமான
இடைவெளியில்

இந்த மேஜையின் உன் விளிம்புக்கும்
என் விளிம்புக்குமாக
நொடிக்கொரு முறை
தாவிக் கொண்டிருக்கிறது
பார்வை

●●

சிறிய கவிதை. இதில் ஒரு காட்சி உள்ளது. அதனுள்ளே எதெல்லாம் என்னவாக வெளிப்பட்டுள்ளன என்பதை ஓரளவு எடுத்த எடுப்பிலேயே நம்மால் அவதானிக்க முடிகிறது. அது ஒரு முதற்கட்ட திறப்பு மட்டுமே. அதனைத் தாண்டி உள்ளடுக்குகளாக ஏதேனும் இருக்கின்றதா என்பதை கொஞ்சம் அனலைஸ் செய்துகொள்வோம்.

  • ‘மௌனத்துக்குரிய விளிம்புகள்’ என தலைப்பு கவனப்படுத்துகிற விஷயங்கள் இரண்டு. ஒன்று மௌனம், இன்னொன்று விளிம்பு. மௌனத்தை கண்களால் பார்க்க முடியாது. அது உணர்வுநிலை (Mood) சம்பந்தப்பட்டது. ‘விளிம்பு’ என்றதுமே விளிம்பிற்குரிய தனித்த அர்த்தப்பாட்டிற்கென ஏதேனும் ஒரு பருப்பொருள் (Concrete Object) நம் மனத்தில் தோன்றி அதனை அடையாளங்கொள்ள உதவும்.
  • ‘மௌனத்துக்குரிய விளிம்பு’ எப்படி இருக்கும்? இதில், தலைப்பே ஓர் உருவகமாகவும் அதன் தன்மையோ துல்லியமற்ற அப்ஸ்ட்ராக்டாகவும் உள்ளது. (அதிலும் ‘விளிம்புகள்’ என பன்மையில் உள்ளது).
  • ஒரு மௌனத்துக்கும் / இன்னொரு மௌனத்துக்குமான ‘இடைவெளி’ காலத்தை அல்லது வரம்பிற்குட்பட்ட ஒரு நேரத்தை குறிப்பதாகத் தொடங்குகிறது. அதற்கு, கவிதைக்குள்ளிருக்கும் காட்சிப்படிமம் (Imagery) உதவுகிறது. 
  • அப்படிமத்திற்குள் ஒரு மேஜை உள்ளது. மேஜையின் எதிரெதிர் பக்கங்களை அதன் வடிவமைப்பு விளிம்புகளாக பிரித்து வைத்திருக்கிறது.
  • ‘உன்’ ‘என்’ என இரண்டு நபர்களை மட்டுமல்ல இரண்டு மனங்களையுமே நொடிக்கொரு முறை தாவுகின்ற பார்வை கொண்டும் ஒற்றை மௌனத்தையே இரண்டாகவும் பிரித்துவிடுகின்றது. (இதில், மனத்தின் முக்கியத்துவத்தை அகம் சார்ந்து கோருகிறது அப்படிமம்). அதனால், மௌனத்துக்குரிய நேர அளவை ‘நொடி’ கணக்கிட்டபடி உருவகப்படுத்துகின்றது.
  • ஒரு சாதாரண மேஜை எனும் பருப்பொருளின் இரண்டு விளிம்புகள் அசாதாரண தருணத்திற்குரிய சாட்சியாக மட்டுமின்றி ‘மௌனம்’ என்கிற அப்ஸ்ட்ராக்டிற்கு ஒரு வடிவத்தையும் வாசகர் உணர்ந்துகொள்ள உதவுகிறது.
  • ‘பார்வை’ தான் இக்கவிதையின் உயிரோட்டம்.
  • அப்பார்வையினால், அதன் தாவும் தன்மையினால் அம்மேஜையின் ‘விளிம்புகள்’ இரண்டு நபர்களுக்கான கவித்துவமாகிவிடுகின்றன. அவையே ‘மௌனத்துக்குரிய விளிம்புகளாகி’ அந்நபர்களை ஊடுருவி அவர்களின் உயிர்த்தன்மையை ஆழப்படுத்தும் விதத்தில் நவீனத்துவமாகிவிடுகின்றன.
  • இது ஒரு வாசகப்பார்வைக் கோணம் மட்டுமே (Point of View). அதுவே இறுதியல்ல. அப்ஸ்ட்ராக்ட் என்கிற தன்மை, வாசகருக்கு வாசகர் வெவ்வேறு விதமாக புதிய அனுபவங்களை வசப்படுத்திக்கொள்ள உதவக்கூடியது. அது ஒரு Endless process with a countless experience.
  • அது நிகழ வேண்டியது வாசகருக்குள்ளே. அதற்கான சந்தர்ப்ப வாய்ப்பை கவிதை ஏற்படுத்த வேண்டும்.
  • தலைப்பில் உள்ள ‘விளிம்புகள்’ எனும் பதம், பன்முகத்தன்மையை (Multiplicity) கோருவதாக உள்ளதால், அதன் அடுக்குகளின் பெருக்கம் வாசகருக்கானதாகிறது.
  • பதினொரு வருட இடைவெளிக்குப் பிறகு இக்கவிதைக்கான வாசகனாய் இதனை இப்போது இக்கட்டுரையின் அத்தியாயத்திற்காக நான் அணுகும்போது, எழுதியபோது மனத்தளவில் இருந்தவற்றைத் தாண்டி புதிய கோணங்களும் கிடைக்கப் பெற்றேன்.
  • முயன்று பாருங்கள் உங்களுக்கும் கிடைக்கலாம்.

அடுத்து-

நாம் அனலைஸ் செய்து பார்க்க, 2017 ஏப்ரலில் என்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட ஒரு கவிதை. பின்னர் அது என்னுடைய ‘360 டிகிரி இரவு’ கவிதைத் தொகுப்பிலும் இடம்பெற்றது.

  • சுழற் காற்றாடி..

எப்போதோ கசக்கிச் சுருட்டி எறிந்த
ஓர் இரவு
பந்தாய் உருண்டு கட்டிலுக்குக் கீழே கிடக்கிறது

இனி
என்னாகும்

நாள்பட அதன் மீது தூசு படியும்
காலத்தின் கை விரல் மேலும் எதையாவது கிறுக்கி வைக்கும்
நிரூபனமற்ற நித்தியங்கள் கூடுதல் இருட்டைப் போர்த்தும்

சுவர்கள் கூடுகிற கீழ் மூலையிலிருந்து சிலந்தி ஒன்று
பந்தை நோக்கி
ரகசிய எட்டுக்கால் வளைத்து
எச்சில் தெறிக்க அதன் மீது வலைப் பின்னும்

காலம் தாழ
நிதானமாக ஒவ்வொன்றாய் அனைத்தும்
மெல்ல அவிழ்ந்து பின்
ஒருங்கிணையும்

அதில்

விசாரணை இல்லை
வாய்தா இல்லை
காத்திருப்பு இல்லை

மனு
இல்லை

அணுக்கமாகப் பகரும் செய்திகள் யாவும்
இருள் சூழ
புத்தியின் வெற்றிடத்திலிருந்து எழுப்பும் கூச்சலாகி
நுணுகி அதிரச் செய்யும் அப் பந்தை

நீங்கள் கேட்கிறீர்கள்
இனி என்னாகும்

அன்றாடப் புழக்கத்தில் கழியும்
மயிர்க் குப்பையோடு
சுருண்டு

அந்தப் பந்து
இன்னுமோர் இரவாகும்

●●

இதுவரை ஏழு அத்தியாயங்களின் வழியே நாம் பேசியவற்றின் தொடர்ச்சியாக, நவீனத்துவக் கவிதையின் கவித்துவக் கருவிகளென இயங்குகின்ற சிலவற்றை இக்கவிதையிலும் நீங்கள் கண்டுகொள்ளலாம். ஆனால், முக்கியமாக இந்த அத்தியாயத்தில் நாம் பேசுபொருளாக்கிக் கொண்ட ‘அப்ஸ்ட்ராக்ட்’ இதில் ஊடுபாவியுள்ள விதத்தைப் பார்ப்போம்.

  • இரவு என்கிற காலவெளி ஒரு பந்தாக உருவகப்படுத்தப்பட்டிருப்பதில் கவிதைத் தொடங்கியுள்ளது. அது கசக்கி சுருட்டி எறியப்பட்டதில் இரண்டு நிலைகளை உடையதாக இருந்திருக்கிறது. 
  • முதலாவதாக, அது ஒரு காகிதமாகவோ அதற்கு நிகரான வேறொரு பொருளாகவோ இருந்திருக்கிறது. இரண்டாவதாக அதன் நிலை, பின்னர் பந்தாக உருமாற்றம் அடைந்துவிடுகிறது. 
  • எனவே படிமப் பதிவாகப் பார்க்கும்போது அது உருளும் தன்மையை எட்டிவிட்டிருக்கிறது.
  • இனி, கவிதைக்குள் பிற சொற்கள் இயங்கும் விதங்களை ஓர் எளிய புரிதலுக்காக அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.
  • ‘காலத்தின் கைவிரல்’ –உருவகம். 
      • இதில் ‘காலம்’ –ஒரு அப்ஸ்ட்ராக்ட். 
      • அதிலுள்ள ‘எதையாவது’ –இன்னொரு அப்ஸ்ட்ராக்ட்.
  • ‘நித்தியங்கள்’ –இது அப்ஸ்ட்ராக்ட்.
  • ‘ரகசியம்’ –இதுவும் அப்ஸ்ட்ராக்ட்.
  • ‘காலம் தாழ’ –இதில் ‘காலம்’ ஒரு அப்ஸ்ட்ராக்ட்.
  • ‘நிதானம்’ –ஒரு அப்ஸ்ட்ராக்ட்.
  • ‘விசாரணை’, ‘வாய்தா’, ‘காத்திருப்பு’ –இவை மூன்றும் அப்ஸ்ட்ராக்ட்.
  • ‘புத்தியின் வெற்றிடம்’ ‘எழுப்பும் கூச்சல்’ –இவை இரண்டுமே அப்ஸ்ட்ராக்ட்.
  • ஒன்றின் மீது இன்னொன்று என அடுக்கடுக்காக அகநிலை மாற்றம் காணக் காண கவித்துவம் கையாண்டு கொண்டிருக்கும் உணர்வுநிலையும் (Mood) மைய உணர்ச்சியும் (Emotion) ஒன்றைப் பற்றியபடி அடுத்து அடுத்தடுத்து எனக் கவிதைக்குள் சுழலத் தொடங்குகிறது.
  • ‘இனி என்னாகும்?’ என்கிற கேள்வி கவிதைவெளிக்குள் வாசகரைப் பங்குகொள்ள எண்ணற்ற கதவுகளையும் திறந்துவிடுகிறது.

வெளிப்படையான விளக்கங்களை பன்முக அம்சங்களுடன் தோற்றப்படுத்திடும் தன்மையை நவீனத்துவக் கவிதைகள் கொண்டுள்ளன. அதற்கு ஏற்ற ஒரு கவித்துவக் கருவிதான் ‘அப்ஸ்ட்ராக்ட்’. நகர்ந்துகொண்டேயிருக்கிற அசல்தனங்களை பின்னிருந்து இயக்குகிற மனோநிலைக்கு ஒத்துப்போகின்ற பூதக்கண்ணாடி என்றும் இதனைச் சொல்லலாம். ஆனால், அது பருப்பொருளின் (Concrete Object) எதிர்நிலையில் ஸ்திரமாக நின்றபடி ஒரு சவாலைப் போல இயங்கக்கூடியது.

போன அத்தியாயத்தில் நாம் முரண்பாடுகள் குறித்துப் பார்த்தோம். அதற்கும் இந்த அப்ஸ்ட்ராக்டிற்கும் நூலிழை வித்தியாசம்தான் என்றாலுமே அந்த வித்தியாசம் என்பது முக்கியமான ஒன்றாகக் கருதத்தக்கது. கவித்துவத் தேர்வுகளில் கவிஞரின் மனம் படைப்புரீதியாக எப்படியெல்லாம் செயல்பட்டுள்ளது என்கிற அவசியத்தைத் தாண்டி, வாசகருக்கு அதன்வழியே எத்தனைத் திறப்புகளை ஒரு படைப்பு நிகழ்த்துகிறது என்பது முக்கியமானதாகிறது.

‘சுழற் காற்றாடி..’ கவிதையை வைத்துக்கொண்டு இந்த அத்தியாயத்தில் நாம் விவரித்துள்ள உதாரணங்களின் துணையோடு நீங்கள் மேலும் உங்களுக்கான பிரத்யேக அனலைஸை முயன்று பாருங்கள். அதன் பிறகு வாசிக்க நேரும் எந்தவொரு நவீனத்துவக் கவிதைக்குள்ளுமிருக்கிற ‘அப்ஸ்ட்ராக்ட்கள்’ உங்களின் வாசகக் கண்களுக்கு சர்வ நிச்சயமாக பிடிபட்டுவிடும்.

தொடர்ந்து பேசுவோம்.


 

About the author

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
ரேவா

Abstract பற்றிய வேறொரு புரிதலுக்கு வழி செய்கிறது கட்டுரை. அரூபம் என்று அறிந்து வைத்த சொல்லிருந்து அதன் பன்முகத் தன்மையை அதன் மீது பரவுகிற அர்த்தங்களின் வெளிச்ச விரிப்பை எப்படியெல்லாம் கையாளl வாய்ப்பிருக்கிறது என்பதை கட்டுரை திறந்து காட்டுகிறது.

சீக்கிரம் முடிந்து போன உணர்வு கட்டுரை கொடுத்ததும் ஒரு வகை பூதக்கண்ணாடி தான்.. ;)

You cannot copy content of this Website