cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 35 தொடர் கட்டுரைகள்

கவித்துவம், கவிதை, கவிஞன் [பாகம்-10]

Getting your Trinity Audio player ready...

எனது மூளை..
கவிதை மற்றும் 
பித்து துணுக்குகளை 
ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது.

-விர்ஜினியா வுல்ஃப்
(ஆங்கில எழுத்தாளர்)
1882-1941

துவரையில் ஒன்பது அத்தியாயங்களில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஒரு மாரத்தான் ஓட்டம் போல, நவீனத்துவக்கவிதையின் சில Poetic devices (or) Elements-களை முன்வைத்து நாம் உரையாடி பகிர்ந்துகொண்டோம்.

அப்படி கடந்து வந்திருக்கின்ற இந்நிலையில்.. ஓர் இடைநிறுத்தம் போல..

முதல் அத்தியாயத்தின் இறுதியில் குறிப்பிட்டிருந்த ‘நவீனக்கவிதைகள் புரியவில்லை’ என்கிற ஸ்டேட்மெண்டை இங்கே இப்போது தொட்டுப் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.

அந்த வகையில்.. ஒன்பது அத்தியாயங்களின் பேசுபொருள்களும் அந்த ஸ்டேட்மெண்டிற்கு சர்வநிச்சயமாக உதவக்கூடியவையே.

அதற்கும் முன்பாக.. 

மனித சுபாவத்தில் உள்ள புரிதல் என்கிற பதத்தைப் பற்றி சற்று விரிவாக பேசிப் பார்ப்போமே.

‘புரிதல்’ என்பது வெளிப்புற உலகு நமக்குள் சதா திணித்துக்கொண்டிருக்கும் தகவல் அறிவும், மனம் இயங்குகின்ற உள் உலகிலே எப்போதுமுள்ள உணர்வுகளும் இணைந்த ஒரு கலவை. எங்கு தேடிப் பார்த்தாலும் மனித இனத்தினிடையே ‘ஒற்றைப் புரிதல்’ என்கிற தன்மை அகப்படுவதில்லை. அதனுடைய அறிவியல் காரணங்களுக்குள் நாம் போக வேண்டியதுமில்லை. அது, இன்னொரு சமயத்தில் தேவைப்படலாம். இப்போதைக்கு ஒதுக்கி வைத்துவிடுவோம்.

நாம் ஒருவருக்கொருவர் எண்ணங்களால் மாறுபடுகிறோம். எனவே, கருத்துகளாலும் வேறுபடுகிறோம். பொதுவில் பலவற்றை பின்பற்றுகிறோம். சிலவற்றை மீறிவிடுகிறோம். நம்முடைய அகச்சூழல் எப்போதுமே புறச்சூழல்களால் வடிவமைக்கப்படுகிறது மற்றும் கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால், அவற்றின்மீது தொன்றுதொட்டு நமக்கு கேள்விகள் எழுகின்றன. பெரும்பாலும் அக்கேள்விகளோடு ஒத்துப்போகும்போதே முரண்படவும் பயிற்றுவிக்கப்படுகிறோம். அதன் தொடர்ச்சியில்.. மேம்படுத்தப்பட்ட அறிவு என்று ஒன்று இருப்பதாக எப்போதுமே நம்பிக்கைக்கொள்ள விரும்புகிறோம். அது ஓரளவிற்கு சரிதான்.

இவற்றினூடே முளைக்கின்ற கேள்விகள் முக்கியமானவை. அவை கேட்கப்படுகின்ற விதங்களில் வித்தியாசங்கள் உண்டு. அப்படியிருக்கையிலே.. எதன் அடிப்படையில் அக்கேள்விகள் எழுகின்றன என்கிற தோற்றுவாயை உற்று நோக்காமல் நாம் கடந்துவிடலாகாது. ஏனென்றால் பதில்களுக்கான க்ளூ அங்கேதான் ஒளிந்துகொண்டிருக்கும். அதனை அசால்டாக தாண்டி போய்விட்டோமேயானால்.. மீண்டும் அந்த தோற்றுவாயை நோக்கி திரும்பி வருவதற்குள் நாம் ரொம்பவே களைத்துப் போயிருப்போம்.

காரணம் என்ன தெரியுமா? 

நம்முடைய எண்ணங்களை நம்மிடமிருந்து நமக்கே கடத்துபவை மொழி மட்டுமே. அதனை வெளியே (அதாவது மனத்திற்கு வெளியே) பகிர்ந்துகொள்ளும்போது அல்லது பகிர்ந்துகொள்ள விழையும்போது அவற்றின் அர்த்தப்பாடுகள் ஒரு பொதுத்தன்மையை கொண்டிருக்க வேண்டிய அவசியம் உள்ளது. நமது சிந்தனையை மனத்திற்குள் அடுக்கிக்கொண்டே இருப்பதற்கு மொழிதான் தொடக்கப் பாதையை அமைத்து தந்திருக்கிறது.

ஒரு மனிதனுக்கு எந்த மொழியின் வழியே ஒரு சிந்தனைத் தூண்டல் நிகழ்கிறது? அடிப்படையில் அதனை தாய்மொழி என்று சொல்லுவோம். அப்படி சொல்லுவதன் முக்கியத்துவம் பிறப்பு என்கிற ஜனித்தலிலேயே ஆரம்பித்துவிடுகிறது. (எப்படியென்பதை பினனர் வேறொரு சமயத்தில் பார்ப்போம்). அயல் மொழிவழி சிந்தனை முறைகளில் ‘புரிதலின்’ பாங்கு சந்தேகத்திற்குரியதே. உள்ளுக்குள்ளே தாய்மொழி சிந்தனைவழியில் ஒரு பெயர்ப்பு நிகழாமல் அது சாத்தியமில்லை.

மனித இன வரலாற்றின் பன்நெடுங்காலத்திற்குப் பிறகான தற்காலச் சூழலில் மொழிவழியே எண்ணங்களின் புதிர்களுக்குள்ளே நுழைவதும் வெளியேறுவதும் இன்றைய மனித இயல்பாகிவிட்டது. இதையே தற்கால வாழ்விற்கேற்ற ஒரு நவீன அடிப்படை புரிதல் என வரிந்துகொண்டேமேயானால்.. பின்னோக்கி பார்க்கும்போது இக்கட்டுரை வரிசையின் முதல் அத்தியாயத்தில் தொட்டுக்காட்டியுள்ள மொழி எனும் பூதக்கண்ணாடியின் வேலைத் திட்டம் குறித்து நமக்கு ஓரளவிற்கு பிடிபட்டுவிடும் என நம்புகிறேன்.

அந்தப் பூதக்கண்ணாடி சிறிய விஷயத்தையும் பெரிதுபடுத்தி உற்றுப் பார்த்துக்கொள்ள உதவுகிறது. எதை? – விஷயத்தை.

சரி.. இங்கே ‘விஷயம்’ என ஒன்று தனித்து உள்ளதா? இல்லை. அது ஒரு பருப்பொருள் அல்ல. அதுவோர் அர்த்தம். பன்முகம் கொண்ட அர்த்தப்பாடு. ஸ்தூலமான பொருட்களையும் அப்ஸ்ட்ராக்ட் போன்றவற்றையும் அடையாளங்கொள்ளுவதற்கு தகுந்த பெயர்களைச் சூட்டியுள்ளோம். அவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களை தம்முள்ளே அமுக்கி வைத்திருக்கின்றன. அதனாலேயே இடத்திற்கு தக்கன அவற்றின் அர்த்தங்கள் வேறுபடுகின்றன. அந்த அர்த்த வேறுபாட்டினை உற்றுப் பார்ப்பதற்கு மொழி எனும் பூதக்கண்ணாடி அவசியமாகிறது.

எனவேதான் மனத்தில் உதிக்கின்ற கேள்வியின் தோற்றுவாய்களை உற்று நோக்காமல் கடந்துவிடலாகாது. பதில்களுக்கான க்ளூ அதனுள்ளேதான் ஒளிந்துகொண்டிருக்கும்.

வ்வாழ்க்கையில் நம்மிடம் இரண்டு வாய்ப்புகள் உள்ளன.

முதலாவது காட்சி வழியானது. இரண்டாவது மொழி வழியானது. ஒன்று, படிமங்களால் அடுக்கப்பட்டு பெருகுகிறது. இன்னொன்று சொற்களால் அடுக்கப்பட்டு பெருகுகிறது. இவ்விரண்டு அம்சங்களையும் புரிந்துகொள்ளுவதற்காக மட்டுமே மனிதக் குழந்தை இன்றளவும் பயிற்றுவிக்கப்படுகிறது. பரிணாம ரீதியாகவே நாம் இன்னும் வளர்ந்து முடிந்தபாடில்லை. அதனால்தான் ‘புரிதலில்’ நமக்கு முழு முற்றான திருப்தி கிடைப்பதில்லை.

பொதுவாக, நாம் இரண்டு விஷயங்களை வெளிப்படுத்தும் விதத்தில்.. அவற்றை, நம்முடைய வாழ்வின் சாரங்களில் ஒன்றென எப்போதும் வைத்திருக்கிறோம்.

  1. என்னால உன்னை புரிஞ்சுக்க முடியலை.
  2. என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க.

முதலாவது, புறத்தை நோக்கி முன்வைக்கப்படுகின்ற ஒரு ஸ்டேட்மெண்ட். இரண்டாவதோ, அகத்திலிருந்து வெளிப்படுகிற சுயம் பற்றின இன்னொரு ஸ்டேட்மெண்ட். பார்க்கப் போனால், ஒவ்வொரு மனித மனத்திற்கும் தன்னுடைய சுயம் (Self) ரொம்பவே முக்கியம். ஆகையால், அப்படியொரு வரையறுக்கப்பட்ட முடிவில் மட்டுமே பொதுவாக மனித மனம் இயங்குகிறது. அதனாலேயே அது, The other point of view என்கிற எதிர்த்தரப்பிற்கு எடுத்த எடுப்பிலேயே போவதில்லை. அதில் தயக்கங்கள் உள்ளன. எனவே, அப்படி போவதற்கு ஒரு தனித்த பயிற்சி தேவைப்படலாம். இருந்தாலுமேகூட.. இங்கே அதுவொரு option மட்டுமே. அப்படி எடுத்த எடுப்பிலேயே எதிர்த்தரப்பிற்கு போகமுடிவதில்லை என்பதினாலே தனித்துவம் வாய்ந்த சிந்தனைக்கோணம் (Perception) தேங்கிவிடுகின்றது.

இந்நிலையில், ‘தான்’-இன் முக்கியத்துவத்தில் சிந்தனையின் வட்டம் விரிவடைய மறுத்துவிடும். சுயத்தின் சிந்தனை வட்டம் விரிவடைய வேண்டுமானால் கொஞ்சம் அதிலிருந்து வெளியே வந்தாக வேண்டும்.

‘என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க’ என்கிற அங்கலாய்ப்பில் அடுத்தடுத்து நகர்ந்தபடியே சுயத்தை முன்னேற்றிக்கொள்ளத் தேவைப்படுகின்ற ஓர் எத்தனிப்பு இல்லை, அதிலொரு சீரிய முன்னெடுப்பும் இல்லை.

ஆனால், அதேவேளை.. ‘என்னால உன்னை புரிஞ்சுக்க முடியலை’ என்கிற வெளிப்பாட்டிலோ.. எதிர்ப்பட்ட புதிரை அல்லது குழப்பத்தை அறிந்துகொள்ள விழைகிற ஓர் எத்தனிப்பு இருக்கிறது. அதிலொரு சிறிய முன்னெடுப்பும் இருக்கிறது. குறைந்தபட்சமாக தேடலோ, ஒரு காத்திருத்தலோ அதனுள்ளே தொக்கி நிற்கிறது.

நம்முடைய சுயநலம் என்பது சொந்த ஈகோவிற்கு தீனி போடுகிற ஓர் எளிய உளவியல் ஏற்பாடுதான். அது போஷாக்காக வளர வளர, நாம் மெல்ல இரட்டைத்தன்மையை எட்டிவிடுகிறோம். இங்கே, எதனை விட்டுக்கொடுக்க மறுக்கிறோம் என்பதல்ல சூட்சுமம். எதனை விட்டு வெளியே வர மறுக்கிறோம் என்பதே அதன் சிறப்பு விதி.

ஒரு செல்ஃபிஷ் ஈகோ.. சுயநலத்தை விட்டுக்கொடுக்காது. சுயநலமோ ஒரு சூப்பர் ஈகோவை கடைவாய்ப்பல்லில் வைத்து மென்றுகொண்டே இருக்கும். முழுங்கவும் செய்யாது, கீழேயும் துப்பாது. அதன் சாறு, ரசம் அதற்கு தேவைப்படுகின்ற ஊட்டச் சத்து. இந்நிலையில் The other point of view-வை லேசில் அனுமதிக்க மறுத்துவிடுகின்ற சுயநலப் பார்வையையும் செவிகளையும் காலம்காலமாக பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளும். பின்னர் அதுவே ஒரு தனித்த குணமாகத் திரண்டு கெட்டித் தட்டிப் போய்விட்டிருக்கும்.

ஆக.. ‘சீ.. சீ.. இந்தப் பழம் புளிக்கும்’ என்பதற்கும் ‘என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க’ என்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை. அது ஜஸ்ட் ஒரு முட்டு சந்து. அதிலிருந்து ஒரு யூ-டர்ன் அடித்து வெளியேறியாக வேண்டிய அவசியம் உள்ளது.

புரிதலுக்கு துணை நிற்கின்ற மற்றொரு பிரதான வஸ்து ‘அறிதல்’. அதாவது.. தகவலறிவு எனும் கச்சாப்பொருளிலே இருந்து ஆய்ந்து அறிந்தவற்றிலிருந்து தெள்ளெனத் தெளிதல். இந்த வரிசையிலான தெளிதல் என்பது அறிதலாகக் கருதப்பட்டு, அது ஓரளவிற்கு புரிதலுக்கு துணை நிற்கும். அப்படியென்றால் அறிதல் கோருகின்ற கறார்தன்மையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதென்ன அறிதல் கோருகின்ற கறார்தன்மை?

ஆராய்ந்து தெளிவடைதல்தான் அது.

இப்படி, ஓர் எண்ணத்தை.. அது வார்த்து எடுக்கின்ற சிந்தனையை ஆய்ந்தறிந்து தெளிவடையும்போது.. அடிப்படை புரிதல் என ஒன்று உருவாகிறது. அந்தப் புரிதலைக் கொண்டு அனைத்தின்மீதும் வெளிச்சம் பாய்ச்சி அடுத்தடுத்தக் கட்ட புரிதல்களை நோக்கி பயணிக்க முடியும்.

இதனையொட்டி.. சில மேற்கோள்களை இங்கே பகிர விரும்புகிறேன்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வள்ளுவப் பெருந்தகை இயற்றிய திருக்குறள்களில் ஒன்று: அதிகாரம் -47 தெரிந்து செயல்வகை. 

குறள் எண்: 467.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

செய்யத் தகுந்த செயலையும் வழிகளையும் எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும் –என்று மு.வரதராசன் எளிமையாக விளக்கம் கொடுக்கிறார். பரிமேலழகரின் விளக்கம் இன்னும் ஆய்ந்து எழுதப்பட்டதாக இருக்கிறது. (வாசகர் தேடி வாசித்துக்கொள்ளலாம்).

இவ்வாறாக எண்ணத்தின் முக்கியத்துவத்தை, அதன் வலிமையை, அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இத்திருக்குறள் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

போலவே, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் புலவர் ஔவை பிராட்டியார் தாம் பாடிய ஆத்திசூடியில் ‘ககர’ வருக்கத்தில் –கேள்வி முயல் –என்கிறார். இதில் கேள்வி ஞானத்தைக் குறிப்பிடும் வகையில்.. கற்றவர் சொல்லும் நூலின் அர்த்தப் பொருளைக் கேட்டு அறிந்துகொள்ள முயற்சி செய் என்கிறார்.

நம்முடைய இந்த அத்தியாயத்தின் பேசுபொருளிற்கு இசைவாக இன்னுமொரு பொருத்தமான திருக்குறளும் உள்ளது: அதிகாரம் -36 மெய்யுணர்தல்; குறள் எண்: 355.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

இத்திருக்குறள், மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதைப் போல.. எதனையும் கேட்டறிந்து புரிந்துகொள்வதோடு நின்றுவிடாமல் அவற்றை நன்கு ஆய்ந்துணர்ந்து தெளிவுறுதல் வேண்டுமென்பதை நமக்கு வலியுறுத்துகிறது. 

மகாகவி பாரதியார், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திற்கேற்ப தன்னுடைய சிந்தனைக் கோணத்தை (Perspective) Modernized செய்து எழுதிய புதிய ஆத்திசூடியில் ‘நகர’ வருக்கத்தில் –நூலினைப் பகுத்துணர் –என்கிறார்.

போலவே, தம் சுயசரிதைப் பாடல் தொடரின் இறுதிப் பாடலாக.. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் உருவமற்ற பரம்பொருளிடம்.. மகாகவி பாரதியார்..

‘அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம்..’ 

–எனவும் பலவற்றை வேண்டிப் பாடுகிறார்.

ந்த மேற்கோள்கள் அனைத்தும் அறிதல்/புரிதல் மற்றும் தெளிவுறுதல்களின் வழிகளையும் முக்கியத்துவங்களையும் அடையாளங்கண்டுகொள்ள உதவுகின்றன. மனித எண்ணம் மற்றும் மொழிவழி சிந்தனை என இவையிரண்டும் செறிவூட்டப்படுவதற்கும் பின்னர் அடைய நேருகின்ற அனுபவரீதியிலான பக்குவத்தை கூர்தீட்டிக்கொள்ளுவதற்கும் தத்துவமும் இலக்கிய வகைமையும் பயன்படுகின்றன.

இந்த கிளைவரிசையில் நவீனத்துவக்கவிதைகளின் புரியாதத்தன்மைகளை நோக்கிய விசாரணைகளை வாசகரின் மனம் கேள்விகளாக எழுப்பும்போது.. மொழி எனும் பூதக்கண்ணாடி ஒரு கருவியாக பயன்படலாம் என்கிற அனுமானத்தை நாம் முன்னெடுக்கிறோம்.

நாம் நம்மிலிருந்துதானே தொடங்குகிறோம் என்கிற கணக்கு ஒன்று உண்டு அல்லவா.

ஒரு சாமானிய மொழியறிவு கொண்ட மனிதனிலிருந்து எழுத்தறிவும் படிப்பறிவும் பெற்ற சாதாரண வாசகர் என்கிற நிலை வளர்ச்சி ஒரு கட்டம். அதிலிருந்து ஒரு சிறப்பு வாசகராக உயர்ந்தெழ நினைக்கின்ற எத்தனிப்பில் மேலும் கொஞ்சம் முயன்று முன்னேறிக்கொள்ள என்னென்ன வழிகள் உண்டோ அவற்றை முயற்சித்து பார்ப்பது அடுத்த கட்டம்.

இந்தக் கட்டத்தில்தான் கவித்துவம் சார்ந்த இக்கட்டுரைக்கான உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதில் நாம் பிரத்யேகமாக தேர்ந்துள்ள Prime subject, நவீனத்துவம்.

ங்கே ஒன்று தோன்றுகிறது. இதுவரையிலான ஒன்பது அத்தியாயங்களின் ஹைலைட்களாக பலவும் எப்படியெல்லாம் அந்த ஸ்டேட்மெண்ட்டான ‘நவீனக்கவிதைகள் புரியவில்லை’-க்கு பயன்படுகின்றன என்பதையும் பார்த்துவிடலாமா?

சரி.. அத்தியாயம் 2-ல் ஓர் அம்சம் உள்ளது: 

அது என்னவென்று ஒரு ரீ-கேப் செய்து பார்ப்போம்.

ரு நவீனத்துவக் கவிதை தம்முள்ளே ஒரு விஷயத்தின் தன்மையை, பொருளை, தனிநபரை, சமூகத்தை, இயற்கையை என ஏதோவொன்றை அல்லது அனைத்தையும் திரட்டி வைத்திருக்கிறது. அவற்றை இழையிழையாக பிரித்தெடுத்து நமக்குரிய சிறப்பு பார்வையை எட்டிவிட நம்மால் இயலும். அதற்கு உதவுபவை என சிலவற்றை முன்னரே ஆழமாக பார்த்துவிட்டோம்.

  • உடல் மற்றும் புலன்களால் உணர்தல் –Feelings.
  • உணர்வு நிலை –Mood.
  • மைய உணர்ச்சி –Emotion.

இவையாகத்தான் நாம் நம் அன்றாட வாழ்வில் இருக்கிறோம். பிறரோடு நட்போ பகையோ பாராட்டுகிறோம். காரணங்களை கண்டடைகிறோம். விஷயங்களின் மையத்தை நியாயப்படுத்துவதற்கு புதிய காரணங்களை உற்பத்தி செய்கிறோம். அவற்றையே ஒரு தத்துவமாக உருமாற்றிவிடத் துடிக்கிறோம். மனித மனம் இப்படியாகத்தான் உளவியலாக Evolve ஆகிக்கொண்டே இருக்கிறது. 

அதேபோல ஒரு நவீனத்துவக் கவிதையானது ஒரு சாமானிய வாசகராகிய நம்முடன் இயைந்து போவதற்கு அதனுள்ளேயும் இதே அடுக்குகள் வேலை செய்கின்றன. மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ அவை அதனுள்ளே இருக்கின்றன.

அப்படியாக ஒரு தனிமனிதனின்-

அறம் குறித்த பிரக்ஞை / ஒழுக்கம் சார்ந்த நம்பிக்கைகள் / நீதி பரிபாலனங்கள்.

இவை ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ தூண்டுகின்றன. வாசகர் பற்றுள்ளவர் என்று வைத்துக்கொண்டால், எதன்மீதெல்லாம் பற்று மிகுந்திருக்கிறதோ அதன் அடிப்படையில் அவருடைய கருத்தாக்கம் வெளிப்படும். ஒத்துப்போகின்ற கருத்தாக்கங்களை எங்கெல்லாம் அடையாளங்காணுகிறாரோ அவற்றைக் கொண்டாடி களித்திடுவார். தன்னுள்ளே நிகழ்வதுதான் வெளியே ஒரு படைப்பிலும் நிகழ்ந்துள்ளது எனும்போது வாசகர் ஒரு நவீனத்துவக் கவிதையுடன் மனத்தை ஒருங்கிணைத்து பயணம் செய்யத் தயாராகிவிடுகிறார்.

சரி.. அப்பயணத்தின் தொடர்ச்சியில் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டிய இன்னும் சில முக்கியமான அம்சங்களை அத்தியாயம்-5ல் விரிவாக பார்த்திருக்கிறோம். 

அதிலொன்று மறைபொருள்:

ரு நவீனத்துவக்கவிதைக்குள்ளே அதன் கவித்துவத்திற்குள் ஊடுபாவாக உறைந்திருக்கும் மறைபொருளை அடையாளங்கண்டுகொள்ள வாசகருக்கு உதவுபவை எனச் சில உண்டு.

ஒரு புற/அகக் கண்டெடுப்பில் இருந்து, துளி யோசனையில் இருந்து, கூர்ந்த ஓர் அவதானிப்பிலிருந்து உருக்கொள்ளும் கவித்துவக் கருவானது, தம்முள் அனுமதிக்கின்ற: 

  • தருணங்கள்
  • தன்மைகள்
  • காரணப் பாத்திரங்கள் 
  • நிகழ்விடம் 
  • ஸ்தூலப் பொருட்கள்.

இவை யாவும் வாசகருக்கான கையேட்டு வழித்துணை. ஒரு நவீனத்துவக்கவிதைக்குள் மேற்குறிப்பிட்டுள்ளவையோ அவற்றில் ஒன்றிரண்டோ கூட போதுமானது. எதற்கு? –கவித்துவம் இயங்கும் தளம் எது என்று அடையாளங் கண்டிட.. இதனால் கருப்பொருளின் மேலோட்ட அர்த்தங்களின் மீது சற்றுநேரம் வாசிப்பளவில் தங்கிக்கொள்ள ஏதுவாக இருக்கும். அடுத்து, அப்படி இருந்துகொண்டே அடுத்த படிநிலை அர்த்தங்களை மறைபொருளாக கவிதை தன்னகத்தே கொண்டுள்ளதா என ஆராயவும் உதவும்.

படிமம் & உருவகம் இரண்டுமே ஒரு மறைபொருளை உணர வழிவகுக்கின்றன. அதனை அடைந்து தரிசிக்கும் பொறுப்பு வாசகரிடம் மட்டுமே உள்ளது. முழுமையான கவிதை அனுபவத்தை எய்த மெனக்கிடும்போது புதிய கோணங்களில் புதிய அனுபவங்கள் வாசகருக்கு கிடைக்கின்றது. அதற்கான உழைப்பானது மொழிவழியாக கவிஞனால் ஆழ உழப்பட்டிருந்தால் அதன் செழிப்பை வாசகர் தன் வாசிப்பின் வழியே அறுவடை செய்வார்.

அவ்வாறாக பெறுகின்ற அனுபவம் பகிர்தலுக்கானது. அதுவே ஒரு நவீனக்கவிதைவெளியின் கவித்துவப் பார்வைக் குறித்த உரையாடலுக்கானதும் கூட.

அடுத்து- அத்தியாயம் 6-லிருந்து சிலவற்றை இங்கே இந்த வரிசையில் கோர்க்கும்போது ஆச்சரியகரமான ஒரு தொடர்ச்சி கிடைக்கிறது. அது என்னவென்று பார்ப்போம்:

வீனத்துவக் கவிதை வாழ்வின் போக்கை, புறம் சார்ந்தோ அகம் சார்ந்தோ கைப்பற்றி எடுத்துச் செல்லும்போது வாசக மனம் அதனுள்ளே இயல்பாக சஞ்சாரம் செய்வதற்கான தருணங்கள் அங்கே படர்ந்திருக்கும்.

வேறெங்கோ நிகழ்ந்திருக்கும் ஓர் அனுபவம் வாசிப்பின் வழியே அங்கேயும் நிகழும் அதிசயத்திற்கு பல கவித்துவக் காரணிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தம்மை வெவ்வேறு கண்ணிகளாக்கிக்கொண்டு  ஏதோ ஒரு படைப்புத் தருணத்தில் ஒருங்கே பிணைத்துக்கொள்ளும் தன்மை உடையவை. அவை அளவில் சிறியதோ பெரியதோ, கவிதையின் கட்டமைப்பில் கையாளப்பட்டிருக்கும் மையக்கருவைப் பொருத்து அமையும்.

நவீனத்துவக்கவிதை எளிமையாக இருக்கக்கூடாது என்பதன் பொருள், அவை கடினமாக இருக்க வேண்டும் என்பதல்ல. That’s not a Rule. இதனை நாம் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு கவிதையை எழுதிக்கொண்டிருக்கும்போதே அவை எளிமையாக இருக்கவேண்டும் என்கிற நோக்கில், வாசகருக்குப் புரியாது என்கிற அக்கறையில் கோட்டைவிட்டு விடுகின்ற தருணங்கள்தான் ஏராளம். மீண்டும் சொல்லுகிறேன். அதுவும் Rule அல்ல. எதிர்ப்பக்கத்தில் காத்திருக்கிற வாசகரை நம்பலாம். நம்ப வேண்டும். அவருக்கு மொழியின் பரிச்சயம் உண்டு. இன்னும் கூட அவர் தன் மொழியின் பரிச்சயத்தை செழுமைப்படுத்திக் கொள்வார்.

சொல்லப்போனால், எழுதுபவர் & வாசிப்பவர் என ஒரு பெரிய மெனக்கெடல் இருமுனையிலும் அவசியமாகிறது.

இங்கே, சமூகவாழ்க்கை என்கிற அமைப்பு எல்லோருக்கும் பொதுவானது. அதனை உள்வாங்கிக்கொள்ளும் விதம்தான் ஆள் ஆளுக்கு மாறுகிறது. அதில் முதற்கண் Claim ஆக முன்வந்து நிற்பது அனுபவம் மட்டுமே. வாசகர் தன் அனுபவத்திற்கு இணையான சாயலை ஒரு படைப்பில் அடையாளங்காணும்போது அவர் அதுவாகிறார். கூடுதல் மைலேஜாக அங்கே ஓர் அனுபவம் அவருக்கு இன்னும் சற்றுநேரம் நீடிக்கிறது.

நவீனத்துவக் கவிதைகள் வாசகருக்கு அதனுள்ளே பங்குபெற இடமளிக்கிறது. வாசகர் அதனை, வேறொரு கோணத்திலிருந்து அணுகிக்கொள்ளலாம் என்கிற வசதியை தமக்குரிய பிரத்யேகமான ஒரு வடிவில் வார்த்து கொடுக்கிறது.

புறத்தைக் கையாளும் கவிதைகளில் உடனடியாக ஒன்றிவிடும் வாய்ப்பு எப்போதுமே ஒரு வாசகருக்கு உள்ளது. காரணம், புறத்தின் பெரும்பகுதிகள் பொருட்களால் நிறைந்துள்ளன. மனிதன் பொருட்களைக் கையாளும் தகவலறிவு உள்ளவன் என்பதால் எளிதாக அவற்றோடு ஒன்றிவிடமுடியும். அவை ஸ்தூலமாக புலன்களுக்கு காணவோ உணரவோ கிடைப்பவை. அதில் நிகழும் ஒப்பீடுகள், காட்சிகள் யாவும் சுலபமான படிமங்களைக் கட்டியெழுப்பி நிறுவும் திறன் உள்ளவை.

அகம் சார்ந்த நவீனத்துவக் கவிதைகளில் நிகழும் கவித்துவத் தருணங்கள் மட்டுமே சவாலானவை. அந்தச் சவால்கள்கூட கவித்துவத்திற்கான கருவிகள் குறித்து அறியாமல் இருக்கும்வரைதான். அவற்றை அறிந்துகொள்ளும்போது, புறத்திலிருந்து அகத்திற்கும் அகத்திலிருந்து புறத்திற்கும் உருவாகின்ற பாலத்தில் புதிய கோணங்களும் மனப்போக்குகளும் புலப்படும்.

ஓகே.. அத்தியாயம் 7-ல் உணர்த்துதல் மற்றும் உணர்தல் குறித்து பேசியிருக்கிறோம். அதிலிருந்து ஒரேயொரு அம்சத்தை மட்டும் இங்கே மீட்டுக்கொள்வோம்:

ணர்த்துவதின் எதிர்ப்பக்கம் உணர்வது இருக்கும்போது நம் புலன்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுஉணர்வு –என ஒவ்வொரு புலனின் சிறப்புத்தன்மையையும் மேம்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை கண்டடைவது அவசியமாகின்றது. அவற்றை மேலோட்டமாகவும் பிழைப்புவாதத்தின் கூறுகளில் ஒன்றாகவும் நெடுங்காலமாக பழக்கப்படுத்தி வந்திருக்கிறோம். ஆனால், தன்னுடைய கலை சார்ந்த ரசனையின் மட்டத்தை உயர்த்திக்கொள்வதற்கு, ஐம்புலன்களை செறிவூட்டுவதற்கு அவற்றை முழுமையாகப் பயன்படுத்த எத்தனிக்க வேண்டும்.

முழுமையாக என்றால் எப்படி?

பார்த்தலை / காண்பதை ஆழப்படுத்துவது. உருவ வடிவங்களை, நிறங்களை, அசைவுகளை என அனைத்தையும் ஊடுருவி பார்த்தல் வேண்டும். அதிலுள்ள நுணுக்கங்களுக்குள் மனத்தை செலுத்த  முயல வேண்டும். 

இப்படி சொல்லலாம், ஒரு தொலைவுக்கும் அண்மைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்தான் காட்சி வடிவில் பதிவு செய்கின்றது. உடனுக்குடன் அவற்றை ஒரு செய்தியாக மூளைக்கு கடத்துகின்றது. அங்கே அவை வெறும் செய்தியாக மட்டுமே தேங்கிவிடுவதில்லை. ஏற்கனவே நாம் Logics என்கிற ஒன்றினை அறிந்து வந்திருக்கிறோம். அத்தகவல்கள் ஒரு Data base ஆக எஞ்சிவிடாமல் அவை, Logical Process-ன் உள்ளே நுழைந்தாக வேண்டியுள்ளது. ஒன்று இன்னொன்றின் தயவோடு மேலெழும், பின்னர் ரசவாதமாகி வேறொன்றும் வெளிப்படும். இது இயற்கை. 

கனிந்துபோதலுக்கும் அழுகிவிடுதலுக்கும் நடுவே நிகழ்வது என்ன? ஒன்றேதான் வேறொன்றாக உருமாற்றம் அல்லது தன்மை மாற்றம் அடைகின்றது அல்லவா. அதற்கிடையே உள்ள வித்தியாசம்தான் அதிலுள்ள விஷய ஞானம். வேறொன்றுமில்லை.

லாஜிக்கல் புள்ளிகளை இணைக்கும்போது அல்லது அடுக்கு வரிசையை மாற்றி வைக்கும்போது தோற்றமாகின்ற புதிய வடிவை நாம் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ள விழைகிறோம். அது ரசனையின் கண்ணாகத் தொடங்கி படைப்பின் கண்ணாக வளர்கிறது.

இதெல்லாம் உற்றுப் பார்த்தல், கூர்ந்து அவதானித்தல் ஆகிய இரண்டிலும் மட்டுமே சாத்தியமாகின்ற அனுகூலங்கள். அதேவேளை, ஒரு கலா ரசிகனுக்கு சவாலாக இருப்பதும் அதுவே.

அதைப் போலவே கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடு உணர்வு ஆகிய புலன்களுக்கும் வேலையுள்ளது. உழைப்பின் ஆற்றல் செயல்படுவது, வெளிப்படுவது என்பது வேறு. உள்ளத்தின் ஆற்றலை செயல்படச்செய்தல், வெளிப்படச்செய்தல் என்பது முற்றிலும் வேறு. இரண்டாமதில் மனித மனத்தின் மெனக்கெடல் உள்ளது. அதனால் அது, வலிந்தும் உணர்ந்தும் செய்கின்ற விஷயமாக மாறுகின்றது. அதனை எத்தனம் என்போம்.

இயற்கையின் கொடையான மனித புலன்கள் ஆற்றலின் நுழைவாயிலாக பாவங்கொள்கிற தன்மையை உள்வாங்கிக்கொள்வது நல்லது.

வ்வரிசை கச்சிதமாக உள்ளது. அடுத்ததாக  அத்தியாயம் 9–ல் பேசியவற்றை இவற்றோடு கோர்த்துப் பார்த்தோமேயனால்.. இரண்டு பிரதான விஷயங்களைக் குறித்து மிகத் துல்லியமாக அலசியிருக்கிறோம். அவை:

  • உணர்வு
  • உணர்ச்சி வெளிப்பாடு

இவையிரண்டிற்குமான வித்தியாசத்தை அந்த அத்தியாயத்தில் விரிவாகவே பார்த்திருந்தோம். அதன்வழியே ‘அப்ஸ்ட்ராக்டையும்’ உள்வாங்கிக்கொண்டோம்.

அப்படியாக நம்முடைய மைய உணர்ச்சிகளுக்கு(Emotions) ஆதாரமாக உள்ளவை உணர்வுநிலைகள்தான்(Moods) என்கிற கணக்கில் வெளிப்படுகின்ற உணர்ச்சியின் சாட்சியாக நமது செயல்களைப் பிரித்துப் பகுத்துப் பார்க்கப்போனால்.. அதில்

  • நம்முடைய உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள்.
  • நம்மிடமிருக்கின்ற உணர்ச்சிகரமான நிலைகளின் தூண்டுதல்கள்.
  • நம்மிடம் தோன்றிடும் உணர்ச்சிகரமான முகபாவனைகள் –என மூன்று அம்சங்கள் கவனத்திற்குரியனவாகின்றன.

இப்படி படிப்படியாக கவனித்துக்கொண்டே வரும்போது..

  • ஓர் உணர்ச்சி வெளிப்பாட்டிலிருந்தோ..
  • அதன் விளைவுகளிலிருந்தோ.. ஒன்றினை நேரிடையாகப் புரிந்துகொள்வதில் எந்தக் குழப்பமும் எழப் போவதில்லை. 
  • நமது ஐம்புலன்களின் துணையால், மனித நடவடிக்கை என்கிற அளவில் அப்புரிதல் தெளிவாகவே இருக்கும்.
  • சொல்லப்போனால், துல்லியத்தன்மைக்கு மிக நெருக்கத்திலிருக்கும்.

போலவே, ஓர் எண்ணவோட்டத்திற்குள்ளே..

  • இடையறாத துடிப்புடன் இருக்கிற சுயபிரக்ஞை (Self-consciousness)
  • கூர்மைப்பட்டுக்கொண்டே இருக்கிற மைய உணர்ச்சி (Sharpen Emotions)
  • கழிவிரக்கத்திற்கு எதிரான தன்னடையாளம் குறித்த யோசனை (Self-identity)

போன்றவற்றை ஒரு கதாபாத்திரம் வழியாக வெளிப்படுத்திட அப்ஸ்ட்ராக்ட் என்கிற சொல்லாடல் உத்தி செம்மையாக பயன்படும். அது நான்/என்/எனது என்கிற First person subjective–ஆக இருந்தாலும் சரி, அல்லது அவன்/அவள்/அது என்கிற Third person subjective–ஆக இருந்தாலும் சரி.

இக்கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். இம்முறை முன்பு நான் எழுதிய மூன்று கவிதைகளை இங்கே அனலைஸூக்கு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். பத்து கட்டுரைகளின் வரிசையில்..

இவற்றை அனலைஸ் செய்து பழகிக்கொள்ள போவது நீங்கள்தான். உங்களின் புரிதல் மற்றும் ஆழ்ந்த நோக்கின் வழியாக வாசக அனுபவமாக இக்கவிதைகள் எவ்விதத்தில் உங்களால் உள்வாங்கப்படுகிறதோ அதனைப் பொருத்து அதன் அர்த்தப்பாடுகளும் உங்களின் பார்வைக்கோணமும் அமையும். அதுவே உங்களின் நவீனத்துவக் கவிதைக்குரிய பிரத்யேக அனுபவமாகவும் விரிவடையத் தொடங்கும் என நம்புகிறேன்.

இதில் சரி, தவறே கிடையாது. நம்மால் முடியுமா முடியாதா என்கிற கேள்விக்கே இடமும் கிடையாது. மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நம்முடைய Reading ability-யை நகர்த்திக் கொள்வதற்காக ஒரு சுயப் பயிற்சிக்கேற்ற சிறிய ஏற்பாடு அவ்வளவே.

இதனைச் செய்து பார்ப்பதற்கான அனலைஸிங் மாதிரிகள் கடந்த அத்தியாயங்கள் தோறும் உள்ளன. (அவற்றைப் புரட்டிப் பார்த்துக்கொள்வது உதவும்). மற்றபடி இம்மூன்று கவிதைகளும் மூன்று விதமானவை. 

ஆனால், இதுவரையில் நாம் உரையாடி வந்துள்ள எந்தெந்த கவித்துவக் கருவிகள் (Poetic devices) இவற்றில் படிந்துள்ளன என்கிற கண்டுணர்தல் (Cross checking) உங்களுக்குள்ளே இயல்பாகவே நிகழ்ந்துவிடும் என்பது கியாரண்டி.

முதல் கவிதை:

2013 மார்ச்சில் என்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டது.

துளிச் சலனம் விழுந்து… வட்டமென விரியும் பசலை…

அழுந்தத் துடைத்துக் கொள்ள எப்போதும்
ஒரு சின்னஞ்சிறு கைக்குட்டை உதவுகிறது

மறுப்பின்றி உச்சரிக்க நேரும் வாக்கியங்கள்
இணக்கத்தோடு இறுகத் தழுவும் ஸ்பரிசம்
ப்ரியமான பார்வையுடன் உதிரும் முத்தங்களின் வாசல்
அசைப் போட்டுத் தனித்திருக்க அனுமதிக்கும் மயக்கம்
கூடலில் முயங்கும் மௌனத்திலிருந்து வெளியேறும் ஒரு சொல்
மரணத்தின் துளி சலனம் விழுந்து வட்டமென விரியும் பசலை
ஊடலில் தென்றல் தொட்டு சிலிர்ப்பூதும் இசையின் லயம்

ஒவ்வொன்றிலிருந்தும் கோர்த்துக் கொண்டு
துளிர்த்துப் படரும் காமத்தின் ஈரம் சிவக்கும் முகத்தில்
மெழுகிப் பெருகும் தாபத்தை அழுந்தத் துடைத்துக் கொள்ள

ஒரு சின்னஞ்சிறு கைக்குட்டை உதவுகிறது

 ●●

அடுத்ததாக இரண்டாம் கவிதை:

2012 மார்ச் மாதத்தில் என்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டது.

கொஞ்சமேனும்..

நிழல் துருத்தும்
சமன் சீரில் குளிர்ந்த துளியாகி
கீழிறங்குகிறாய் என் சரிவில் 

அடிவாரச் சொற்களில் வீசும் வெயில் மீது
கொஞ்சமேனும் பூச முயல்கிறேன்
உன் நிறத்தை 

மீண்டுமொரு தொடர்பு நுனி சிக்கித்
தலையசைகிறது துருத்தி நிழல் பிதுங்கும்
சிறுவாழ்வு

 ●●

மூன்றாவது கவிதை:

2017 மார்ச் மாதத்தில் என்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டது.

உளவியல் ரௌடிகள் மலிந்த வதைக்கூடம்

விலங்குகள் உரசுகிற உலோக ஒலியோடு
பொடித்து உதிரும் வார்த்தைகளின் இரவு துருவேறுகிறது

வட தென் துருவங்களைக் குத்தும் காந்த முள்ளின் முன்னே 
நீளும் திசை
கொண்டுபோய் நிறுத்துகிற

வாசலில்

கொட்டிக் கிடக்கின்றன
மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
மாத்திரைகள்

பிறழ்ந்த
நெடில் குறிலில் வார்த்தெடுத்த ஆயுதங்களின் கூர்மை 
தீட்டப்பட

தொங்கும் நாவை

இதற்கு முன்பும் வேறோர் அர்த்த சந்தையில்
ஏலம் விடத்
தூக்கி வந்தபோது
வேடிக்கைப் பார்த்ததுண்டு

ரகசியமேதுமின்றி
வெட்டவெளியில் அப்பட்டமாய் நிறுவப்படுகிற
வதைக்கூடத்தின் ப்ளூ பிரிண்ட்
நஞ்சின் நிறத்தில் இல்லை

உயிர் நீத்த மௌனத்தின் உடல் மீது
வேர்ப்பிடித்துப் பரவுகிறது
விஷச் செடியின் ஈர வாசனை

துரத்தும் சொல்லொன்றின் கனவை 
பலிபீடத்தில் கிடத்தும்படி
இறைஞ்சுகிறது
கண்

மனத்தூண்டில் சீண்டப்பட்டுத் துள்ளும் தனிமை வட்டங்கள்
விரிந்து மோதும் அபத்தச் சுவரில்
வாழ்ந்துகெட்ட கோட்டோவியங்கள்

தடயம் ஏதும் இருப்பதில்லை

உருவகங்கள் வார்த்தைகள் உருவகங்கள் குறியீடுகள்
மேலும் மேலும் வார்த்தைகள்

உளவியல் சிதைக்கும் வார்த்தைகள் 
உருவகங்கள்

காற்றுப் புகா வதைக்கூடத்தின் மட்கிய நெடியில்
விருப்பக் குறியீடுகளன்றி

தடயமேதும் இருப்பதில்லை

●●

நவீனத்துவக் கவிதைகளைப் புரிந்துகொள்வதற்கான முகாந்திரம் நம்மிடம்தான் உள்ளது. நம்முடைய மெனக்கிடல் எப்படியுள்ளது என்பதைப் பொருத்து அதற்கான ரிசல்ட் இருக்கும். 

நவீனத்துவக் கவிதை தம் தளத்திற்கு மேலேற்றிவிட நம்மை நோக்கி கரம் நீட்டும்போது, ஒரு வாசகராக நாமும் நம்மை சற்றே மேல்நோக்கி உந்தி தள்ளினோம் என்றால் ஓர் எல்லையிலிருந்து இன்னோர் எல்லையிலுள்ள ரசனைத் தளத்தினை கொஞ்சம் சுலபமாக எட்டிவிடலாம்.

நான் அவ்விதமாகத்தான் Inch by Inch என்னை நகர்த்திக்கொண்டிருக்கிறேன்.

மேலே பகிர்ந்துள்ள மூன்று கவிதைகளையும் அனலைஸ் செய்து பார்க்கவிருக்கும் உங்களின் பயிற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

தொடர்ந்து பேசுவோம்.


About the author

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website