cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 11 மலர்விழி மொழிபெயர்ப்புகள்

கான்ஸ்டன்டைன் பி கெவாபே கவிதைகள்


1. மெழுகுவர்த்திகள்

 

நம் எதிர்கால நாட்கள்
நம் முன் நிற்கின்றன
ஏற்றப்பட்ட சிறிய மெழுகுவர்த்திகளின் வரிசையைப் போல
தங்க நிற, சூடான மற்றும் உயிர்ப்புள்ள சிறிய மெழுகுவர்த்திகள்.

கடந்த நாட்கள் நமக்கு பின்னால் உள்ளன,
அணைக்கப்பட்ட துக்க மெழுகுவர்த்திகளின் வரிசையைப் போல;
அருகில் இருப்பவை
இன்னும் புகைகின்றன
உருகிய மற்றும் வளைந்திருக்கும்
குளிர்ந்த மெழுகுவர்த்திகள்.

நான் அவற்றைப் பார்க்க விரும்பவில்லை;
அவற்றின் வடிவம் என்னை வாட்டுகிறது
அவற்றின் முதல் ஒளியை நினைத்து பார்க்க
எனக்கு வருத்தமாயிருக்கிறது.
நான் என் எரியும் மெழுகுவர்த்திகளை
முன்னே பார்க்கிறேன்.

எனக்குப் பின்னால் திரும்ப வேண்டாம்
அதனால் நான் பார்த்து நடுங்கத்
தேவையில்லை
இருண்ட கோடு எவ்வளவு வேகமாக நீளுகிறது என்பதையும்
அணைந்த மெழுகுவர்த்திகள் எத்தனை வேகமாக பெருகுகின்றன என்பதையும்.

2. அமுதக்கல்

 

அமுதக்கல்
அரை சாம்பல் நிற அமுதக்கல்லைப் பார்த்து,
எனக்கு இரண்டு அழகான சாம்பல் நிறக் கண்கள் நினைவுக்கு வந்தது

இருபது வருடங்களுக்கு
முன் இருந்திருக்க வேண்டும்
அவற்றை நான் பார்த்து . .
ஒரு மாதம் நாங்கள் ஒருவரையொருவர் நேசித்தோம்
பின்னர் அவர் பணிக்குச் சென்றார், ஸ்மிர்னாவிற்கென நினைக்கிறேன்,
நாங்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை.

அவர் வாழ்ந்திருந்தால்
சாம்பல் நிறக் கண்கள் —
தங்கள் அழகை இழந்திருக்கும்
அழகான முகம் கெட்டுப் போயிருக்கும்.
ஓ நினைவே,
அவைகளை அப்படியே பாதுகாத்திரு
மேலும், நினைவே,
என்னுடைய இந்த நேசத்திற்கு உன்னால் திரும்பக் கொண்டு
வர முடிந்ததையெல்லாம்
இன்றிரவு என்னிடம் கொண்டு வா.

3. உடலே நினைவு கொள்

 

உடலே நினைவு கொள்
நீ எவ்வளவு நேசிக்கப்பட்டாய்
நீ படுத்திருக்கும் படுக்கைகளுக்காக மட்டுமல்லாது
உன்னை நோக்கிய விழிகளில்
வெளிப்படையாக ஒளிரும் ஆசைகளுக்காக…
மற்றும்
உனக்காய் நடுங்கிய குரல்களும்

ஒரு சில வாய்ப்புகளில்,
தடைகள் மட்டுமே அவற்றை
விரக்தி அடையச் செய்தன
இப்போது முடிவாக அவை
அனைத்தும் கடந்த காலத்தில் உள்ளன.
நீயும் உன்னையே அந்த ஆசைகளிடம் தந்து விட்டது போலத் தெரிகிறது.

நினைவு கொள்
உன்னைப் நோக்கிய
விழிகள் எப்படி ஒளிர்ந்தன
என்றும்
உடலே நினைவு கொள்
அந்தக் குரல்களில் அவர்கள் உனக்காக எப்படி நடுங்கினார்கள் என்றும்!!

4. நகரம்

நீ சொன்னாய்
“நான் வேறொரு நாட்டுக்கு
வேறொரு கடற்கரைக்கு செல்லுவேன் என்று
இந்த நகரத்தைக் காட்டிலும் சிறந்த நகரத்தைக் கண்டடைவேன் என்று
நான் என்ன முயற்சி செய்தாலும்
அது தவறாக மாறிடவே விதிக்கப்பட்டிருக்கிறது
மற்றும் என் இதயம் ஏதோ இறந்தது போல புதைந்து கிடக்கிறது

இந்த இடத்தில் எவ்வளவு காலம்
என் மனதை உலர விட முடியும்
நான் எங்கு திரும்பினாலும்
நான் எங்கு பார்த்தாலும்
என் வாழ்வின் கருப்பு இடிபாடுகளை இங்கு காண்கிறேன்
இங்கு நான் பல வருடங்களை செலவிட்டேன், அவற்றை வீணடித்தேன், அவற்றை முழுவதுமாக அழித்தேன்”

நீ வேறொரு புதிய நாட்டை கண்டடைய மாட்டாய்
வேறொரு கடற்கரையையும்
கண்டடைய மாட்டாய்
இந்த நகரம் எப்பொழுதும்
உன்னைப் பின்தொடரும்,
இதே தெருக்களில் நடப்பாய்,
இதே சுற்றுப்புறங்களில் முதுமை அடைவாய்
இதே வீடுகளில் உனக்கு நரை விழும்
நீ எப்போதும் இந்த நகரத்திலேயே …


ஆசிரியர் குறிப்பு :

கான்ஸ்டன்டைன் பி கெவாபே (Constantine Petrou Cavaf) என்பவர் ஒரு பத்திரிகையாளராகவும் அரசு ஊழியராகவும் பணியாற்றிய ஒரு கிரேக்கக் கவிஞர் ஆவார். அலெக்ஸாண்டிரியா, எகிப்தில் ஏப்ரல் 29, 1863 இல் பிறந்தார். அவர் 154 கவிதைகள் எழுதினார்; இன்னும் டஜன் கணக்கானவை முழுமையடையாமல் அல்லது ஓவிய வடிவில் இருக்கின்றன. அவரது வாழ்நாளில், அவர் தொடர்ந்து தனது படைப்புகளை முறையாக வெளியிட மறுத்துவிட்டார், மேலும் உள்ளூர் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் அவற்றைப் பகிர்ந்து கொள்ள விரும்பினார், அல்லது அவற்றை தானே அச்சிட்டு ஆர்வமுள்ள எவருக்கும் வழங்க விரும்பினார். அவரது மிக முக்கியமான கவிதைகள் அவரின் நாற்பதாவது வயதுக்குப் பிறகு எழுதப்பட்டு, அவர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அவரது படைப்புகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டன. அவற்றில் பல பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

About the author

மலர்விழி

மலர்விழி

கவிஞர் மலர்விழி பெங்களூரில் வசிக்கும் மென்பொறியாளர், கவிதைகள் எழுதுவதோடு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். ஓவியங்கள் மீதும்  வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடைய,
இவருடைய கவிதைத் தொகுப்புகள் :
’விடாமல் துரத்தும் காதல்’ (எமரால்டு பதிப்பகம்),
“ஜூடாஸ் மரம்” (வேரல் புக்ஸ் )

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
சுஜய் ரகு

//இருண்ட கோடு எவ்வளவு வேகமாக நீளுகிறது என்பதையும்
அணைந்த மெழுகுவர்த்திகள் எத்தனை வேகமாக பெருகுகின்றன என்பதையும்.// கவித்தும் மாறாத மொழிபெயர்ப்பு ……வாழ்த்துகள் 🌷🌷🌷

You cannot copy content of this Website