1.
கடவுளே அது நட்சத்திரங்களால் நிறைந்திருக்கிறது
அதை பெரியதாகவும்
நமக்குத் தெரிந்ததற்குச் சமமாகவும் நினைக்க விரும்புகிறோம்.
அதிகாரிகளுக்கு எதிராக ஒரு மனிதன்.
அல்லது மிருதன்களின் நகரத்திற்கு எதிராக ஒரு மனிதன்.
ஒரு மனிதன், உண்மையில் அவன் மனிதனில்லை, புரிந்து கொள்வதற்காக அனுப்பப்பட்டவன்.
கூட்டமாய் பயணிக்கும் மனிதர்கள் இப்போது சிவப்பு எறும்புகளைப் போல அவனைத் துரத்துகிறார்கள்.
அமெரிக்காவின் காற்சட்டைகளை அவிழ்த்து விடுங்கள். ஒரு மனிதன் ஓடிக்கொண்டிருக்கிறான்
இறக்குவதற்கு ஒரு சுமையுடன்,
கப்பலைப் பிடிக்க,
இந்தச் செய்தி எல்லா இடங்களுக்கும் செல்கிறது. . . .
ஆயினும் இது கடலுக்கு அடியில் உள்ள வாழ்க்கையைப் போலிருக்கலாம்: அமைதியான,மிதமான, வினோதமான தீங்கற்று, பழமையான நினைவுச்சின்னங்களின் வடிவமைப்புடன்.
சிலர் கற்பனை செய்ய விரும்புகிறார்கள்
பிரபஞ்சத்தின் தாயொருத்தி நட்சத்திரங்களின் ஊடே பார்க்கிறாள்,
ஆம், ஆம் என்று வாய்விட்டுச் சொல்லியபடி
நாம் வெளிச்சத்தை நோக்கி குறுநடையுடன் செல்லும் போது, விளிம்புகளில் தள்ளாடினால் அவள் உதட்டைக் கடிக்கிறாள்.
அவள் மார்பில் நம்மை ஏந்திக் கொள்ள ஏங்கியவாறு , அவள் சிறந்ததையே நம்புகிறாள்.
தந்தை பக்கத்து அறையில் புயலென நுழைந்து
இராஜ்ஜியத்தின் படை வருகிறதெனக் கூச்சலிடுகிறார்
எது நம் தாடையை உடைக்கும் என்ற கவலை இனியில்லை.
சில நேரங்களில், நான் ஒரு ஊரகச் சமூகத்தில் உள்ள நூலகத்தைப் பார்க்கிறேன்.
திறந்த பெரும் அறையில் அனைத்தும் உயரமான அலமாரிகள் மற்றும்
ஒட்டுமொத்த மக்களால் கொறிக்கப்பட்ட பென்சில்கள்
புழக்கத்திலுள்ள ஒரு கோப்பையில் உள்ளன.
வாரக்கணக்கில் ஒருவருக்கு அல்லது இன்னொருவருக்குச் சொந்தமாக
குடும்பப் பெயர்களின் குறுகிய வரிசையில்
புத்தகங்கள் எல்லா நேரங்களிலும் இங்கு வாழ்கின்றன, (பெரும்பாலும் இரவில்) ஒரு முகத்துடன் பேசும்
ஒரு ஜோடிக் கண்கள். மிகவும் குறிப்பிடத்தக்கப் பொய்கள்.
2.
சார்ல்டன் ஹெஸ்டன் உள்ளே அனுமதிக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறார்.
அவர் ஒருமுறை பணிவுடன் கேட்டார்.
மேல் வயிற்றிலிருந்து கத்தி இரண்டாவது முறை. மூன்றாவது முறை,
அவர் அதை மோசஸைப் போலவே செய்தார்: உயர உயர்த்திய கைகள், பயமுடையதொரு வெள்ளை முகம்.
மிருதுவான சட்டை, நேர்த்தியான அங்கி,
அவர் கொஞ்சம் குனிந்து உள்ளே வருகிறார்,
பின்னர் நிமிர்கிறார். அறையை நுட்பமாக நோக்குகிறார். நான் சைகை செய்யும் வரை அவர் நிற்கிறார்,
பின்னர் அவர் அமர்கிறார். பறவைகள் மாலை நேரக் கீச்சொலிகளைத் தொடங்குகின்றன.
யாரோ கீழே கரிக்கட்டைகளை எரிக்கிறார்கள்.
என்னிடம் விஸ்கி இருந்தால் எடுத்துக் கொள்வார்.
இல்லாத பட்சத்தில் தண்ணீரை.
நான் முதலிலிருந்து தொடங்கச் சொன்னேன்,
ஆனால் அவர் பாதியிலிருந்து
தான் ஆரம்பித்தார்.
உலகம் தலைகீழாய் மாறும் முன்பு
அது எதிர்காலமாய் இருந்தது என்று கூறுகிறார்.
கதாநாயகர், உயிர் பிழைத்தவர், கடவுளின் வலது கரம், அவர் நிலவின் வெற்றிடத்தைப் பார்க்கிறார் எனக்கங்கு
செங்கல்லாலும், எலும்பினாலும் கட்டமைக்கப்பட்ட மொழி தெரிகிறது.
அவர் தனது இருக்கையில் நேராக அமர்ந்தபடி, மெதுவாக நீண்ட துயர்மிக்கப் பெருமூச்சை உள்ளிழுத்து பின் விடுகிறார்.
எனக்குத் தெரிந்த வரை, நான் இந்த பூமியின் கடைசி உண்மையான மனிதன்.
நான் புகைபிடிக்கலாமா? வெளியே குரல்கள் மென்மையாகின்றன. விமானங்கள் புறப்படுகின்றன அல்லது திரும்பச் செல்கின்றன.
அவள் படுக்கைக்குச் செல்ல விரும்பவில்லை என்று யாரோ ஒருவர் அழுகிறார். காலடிகள் முன் செல்கின்றன.
பக்கத்து வீட்டு முற்றத்தில் ஒரு நீரூற்றுத் தனக்குத்தானே பேசிக் கொள்கிறது, இரவின் காற்று வீட்டின் உட்புறத்தில் ஒலி எழுப்புகிறது.
அது மற்றொரு காலம், நாங்கள் முன்னோடிகளாக இருந்தோம் அவர் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார். இங்கே உயிருடனிருக்க சண்டையிடுவீர்களா? பூமியில் பயணிக்க
கடவுளுக்குத்-தெரியும்-எங்கே-என? பனிக்கட்டிக்கு அடியில் புதைந்த அட்லாண்டிஸ்,
ஒரு நாள் காட்சியிலிருந்து மறைந்தது, தற்போது கடினமான பனிப்பாறையாக மாறியதை நினைக்கிறேன்.
ஓ!! நம் கண்கள் இருட்டுக்குப் பழகிவிட்டன.
3.
நாம் தனியாக இருக்கிறோம் என்று நம்புவதே மிகப்பெரியத் தவறு.
கணப்பொழுதில் மற்றவர்கள் வந்து போய்விட்டனர்-
எல்லாம் சேர்ந்து, விண்வெளி முழுக்க நெரிசல் நிறைந்திருக்கலாம்,
பொங்கி வழியும் ஆற்றலை
நாம் பார்க்கவோ அல்லது உணரவோ இல்லை
வாழ்ந்து, இறந்து, முடிவெடுத்து,
எல்லா கிரகங்களிலும் திடமாகக் கால்தடத்தைப் பதிக்கிறார்கள்,
கட்டளையிடும் பெரும் நட்சத்திரங்களைக் கும்பிட்டு,
அவர்கள் தம் நிலவுகள் எதுவாக இருந்தாலும் அதன் மீது கற்களை வீசுகிறார்கள்.
அவர்கள் மட்டுமே
அவர்களுக்கும்-நமக்குமான-மினுமினுக்கக்கூடிய பெரிய கரும் தூரத்தை வியந்து, தெரிந்து கொள்ளும் ஆசையுடன் வாழ்கிறார்கள்.
ஒருவேளை இறந்தவர்களுக்குத் தெரியும், அந்தி நேரத்தில். மினுக்கும் ஒரு மில்லியன் விண்மீன்களின் ஒளிக்கீற்றுகளைக் கண்டு
அவர்களின் கண்கள் இறுதியாக விரிவடைகின்றன.
என்ஜின்கள் இயக்கப்படும் சத்தம், வெறித்தனமாக ஹாரன் சத்தம் இடைவிடாமல் கேட்கிறது.
அலைவரிசையை மாற்ற இயலாத வானொலி போல, படுக்கைக்கு ஒரு அடி கீழே நான் இருக்க விரும்புகிறேன்.
அகலத் திறந்தவாறு, வெள்ளமாய் ஒரே நேரத்தில் எல்லாம் பாயவும்,
மற்றும் இறுக்கமாக மூடியவாறு, எதுவும் தப்பிக்க முடியாதபடியும்.
நேரமும்,
தன்னைத்தானே சுருட்டிக்கொண்டு புகை போலச் சுழல வேண்டும்.
அவ்விதமாய்
நான் இப்போது என் தந்தையின் அருகில் அமர்ந்திருக்கலாம்.
அவர் தனது புகைக்குழாயின் முகப்பில் எரியும் தீக்குச்சியை உயர்த்தும் போது
1959 குளிர்காலத்தில் முதல் முறையாக…
டிரேசி கே. ஸ்மித் மாசசூசெட்ஸில் பிறந்து வடக்கு கலிபோர்னியாவில் வளர்ந்தார். அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் BA மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்தில் MFA பெற்றார். 1997 முதல் 1999 வரை அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஸ்டெக்னர் பெல்லோஷிப்பைப் பெற்றார். ஸ்மித் நான்கு கவிதை புத்தகங்களை எழுதியவர்: தி பாடி’ஸ் க்வெஸ்டின் (2003), இது ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க கவிஞரின் சிறந்த முதல் புத்தகத்திற்கான கேவ் கேனெம் பரிசை வென்றது; டூயண்டே (2007), ஜேம்ஸ் லாஃப்லின் விருது மற்றும் எசென்ஸ் இலக்கிய விருதை வென்றவர்; லைஃப் ஆன் மார்ஸ் (2011), கவிதைக்கான புலிட்சர் பரிசு வென்றவர்; மற்றும் வேட் இன் த வாட்டர் (2018). 2014 ஆம் ஆண்டில், அகாடமி ஆஃப் அமெரிக்கன் பொயட்ஸ் பெல்லோஷிப் வழங்கப்பட்டது. ஒரு நினைவுக் குறிப்பு, ஆர்டினரி லைட் (2015) எழுதியுள்ளார், இது புனைகதை அல்லாத தேசிய புத்தக விருதுக்கான இறுதிப் போட்டியாகும்.
ஜூன் 2017 இல், ஸ்மித் ‘அமெரிக்க கவிஞர் பரிசு’ பெற்றவர். ஆங்கிலம் மற்றும் ஆப்பிரிக்க மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க ஆய்வுகள் பேராசிரியராக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு கற்பிக்கிறார். ஹார்வர்ட் ராட்கிளிஃப் நிறுவனத்தில் சூசன் எஸ். மற்றும் கென்னத் எல். வாலாச் பேராசிரியராகவும் உள்ளார். அவர் அமெரிக்கன் பொது ஊடகத்தின் தினசரி வானொலி நிகழ்ச்சியையும், போட்கேஸ்ட்டாக ஒலிபரப்பாகும் தி ஸ்லோடவுன் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார், இது கவிதை அறக்கட்டளையால் நிதியளிக்கப்பட்டது.
கவிதைகள் வாசித்த குரல் : மலர்விழி
Listen On Spotify :
சிறந்த கவிதை மொழிபெயர்ப்பு .,,
ஆளுமையான ஆழமான கவிதைகள்